கண்ணுடைய வள்ளல் பள்ள மலியார் கலியுலகில் பரமன் உருவாய்ப் பணிந்தோருக்கு உள்ள படியீது எனஉணர்த்தி உலவா முத்தி உறக்காட்டிக் கள்ள மதவல் இருள்கடிந்து காணும் காழிக் கண்ணுடைய வள்ளல் கருணை செயும்சூழல் வளம்சேர் சோழ மண்டலமே | 28 |
திருஞான சம்பந்தரது திருவருள் பெற்றுச் சீர்காழியில் பெரிய அநுபூதிமானாக வாழ்ந்தவர் கண்ணுடைய வள்ளல். உலகில் இறைவனைப் பணியும் மெய்யன்பருக்கு முத்தியைக் காட்டும் ஞான நோக்காய் இசைந்த கண்ணுடைமை பற்றி இவர் கண்ணுடைய வள்ளல் எனப்பட்டார். இவர் இயற்றிய நூல் ஒழிவிலொடுக்கம் என்பதாகும். இவர் வழிவந்தோரால் ஆளப்பெற்ற அறிவு நூல்கள் வள்ளலார் சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன. அம்பலவாண தேசிகர் ஒருவா மழுமான் இடமொருவி ஒருமா னிடமெய் உருத்தாங்கும் அருளா கரன்அம் பலவாணற்கு அன்பு பெறும்ஆ வடுதுறைவாழ் தருவார் கொடைசேர் இராமலிங்க சாமி தழைத்த சந்நிதியான் மருவார் பணிபூங் கயிலாயம் வளம்சேர் சோழ மண்டலமே | 29 |
திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தில் அருளாட்சி செய்யும் தலைவராக எழுந்தருளியிருந்தவர் அம்பலவாண தேசிகர் சிவபெருமானிடம் அன்புபூண்டு அச்சிவன் மானிட உருவந்தாங்கியது போல் அவர் வாழ்ந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் அன்பர் குழாத்துள் இராமலிங்கசுவாமி என்பவர் அங்கு வாழ்ந்து வந்தார். அம்பலவாணர் மூன்றாம் பட்டத்தில் 15-ஆம் நூற்றாண்டில் எழுந்தருளியிருந்தவர். அவரை அடுத்த அம்பலவாணர் இந்நூலாசிரியருக்கும் பிற்காலத்து 1770 - 1789-இல் வாழ்ந்தவர். |