தாசி வல்லி தனதா னியத்தின் உயர்ந்தோர்கள் தாமே என்னும் தருக்கேயோ வினவாது இரவில் நெற்கதிரால் வேய்ந்தார் வல்லி வீடதல்லால் கனிசேர் தமிழ்க்குப் பன்னிரண்டு கடகம் யானைக் காடளித்த மனைவாழ்வு உடையான் வெண்ணெய்நல்லூர் வாழ்வான் சோழ மண்டலமே. | 74 |
ஒருமுறை கம்பர் தொண்டை நாட்டில் உள்ள திருவொற்றியூர் சென்றார். அங்கு சதுரானை பண்டிதர் மடத்தில் இருந்த வல்லி என்ற தாசியைக் கண்டு காதல் கொண்டார். சோழநாடு வந்தபோது வல்லியையும் உடன் அழைத்து வந்தார். வல்லியின் வீடு மழையில் நனையாமல் இருக்கச் சடையப்ப வள்ளல் கம்பரிடம்கூடச் சொல்லாமல் ஓர் இரவில் நெல் கதிர்களைக் கொண்டு வேய்ந்தார். சடையன் புலவர்க்கு யானைகள் அளித்ததும் கூறப்படுகிறது. பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேநெல் கதிராலே வேய்ந்தருளும் கங்கைப் - பதிநேர் வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத் தருவான் அவன்சடையன் தான் என்பது கம்பர் பாடல். இராமகாதையில் சடையன் எண்ணத் தகும்பார் உள்ளளவும் இரவி மதியம் எழும்அளவும் கண்ணற்கு இனிய சயராம கதையில் ஒருபான் கவியமுதும் வெண்ணைச் சடையன் சடையன்என விறல்ஆர் கம்பன் விளங்கவைத்த வண்ணத் துரைவே ளாண்பெருமான் வளம்சேர் சோழ மண்டலமே | 75 |
உலகு உள்ள அளவும், சூரிய சந்திரர்கள் உள்ள அளவும் இராமன் சரிதம் கூறும் கம்பராமாயணத்தில் சடையன் சடையன் எனக் கம்பர் விளங்கவைத்த பெருமை வேளாண் மரபினர்க்கு உரியது. மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி அஞ்சலிற் கடிதுஎடுத்து எறிய வேநளன் விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணையில் தஞ்சம்என் றோர்களைத் தாங்கும் தன்மையே என்பது கம்பர் பாடல்களில் ஒன்று (யுத்த. சேதுபந்தனப் படலம் - 9). |