வெண்ணெய்நல்லூர் விள்ளும் மதுரை அலங்கரித்த வீம்பு நோக்கி வெண்ணெய்நல்லூர் உள்ளும் இடுகாடு ஒக்கும்என உரைத்தார் கம்பர் உரைத்தமுறை அள்ளும் அணியாற் பசும்பொன்னால் அமரா பதிபோல் அலங்கரித்தே வள்ளல் வழுதி அதிசயிப்ப வாழ்ந்தோன் சோழ மண்டலமே | 76 |
ஒருமுறை கம்பர் பாண்டிநாடு சென்றிருந்தார். மதுரை அலங்காரம் எவ்வாறு இருக்கிறது என்று கேட்கச் சடையனின் வெண்ணெய்நல்லூர் இடுகாடுபோல் இருக்கிறது என்றார். அப்படிப்பட்ட ஊரைப்பார்க்க வேண்டும் என்று பாண்டியன் வரவே வெண்ணெய்நல்லூரைத் தேவலோகம் போலச் சடையன் அலங்கரித்திருந்தான். வெண்ணெய்நல்லூர் என்பது கும்பகோணத்தை அடுத்துள்ள கதிராமங்கலம் [கதிர்வேள் மங்கலம்] ஆகும் என்ற ஒரு கருத்தும் உண்டு. அதனால் வெண்ணெய்நல்லூர் சோழநாட்டுத் தலம் என்று கூறப்படுகிறது. சடையனின் வெண்ணெய்நல்லூர் நடுநாட்டு ஊர் எனப் பலர் கருதுவர். கன்றாப்புடையான் பொன்றாப் புகழோன் தில்லைவண்ணம் புகன்றோன் வெண்பா ஒன்பதுபொன் நன்றாற் றியபொன் நூறுவண்ணம் நாட்டி விருது நாட்டியகோன் கன்றாப் புடையான் பேருடையான் கல்வி யுடையான் கனவாழ்வு மன்றாப் பொலியும் திரள்வீதி வகித்தார் சோழ மண்டலமே | 77 |
கன்றாப்பூர் உடையான் என்பவர் ஒரு சோழமண்டலப் புலவர். இவர் தில்லைக்கு ஒரு வண்ணம், வெண்பா ஆகியவை பாடியுள்ளார். இவர் கற்றறிந்த சான்றோர். |