பக்கம் எண் :

62சோழமண்டல சதகம்

சிலம்பன் திருவேங்கடன்

நாமே வியசொல் இலக்கணமாம்
          நன்னூ லகத்து நாட்டிவைத்த
பூமேல் எனும்பா டலுக்குஅளித்த
          பொன்ஆ யிரமும் போதாதோ
தேமே விடுமா லையும்கொடுத்த
          சிலம்பன் திருவேங் கடன்வாழ்வு
மாமே வியபூம் பொழில்வாவி
          வளம்சேர் சோழ மண்டலமே
87

சொல் இலக்கணம் கூறும் நன்னூலின் உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள

பூமேலா ளாரென்பார் பூம்கோர் என்செய்யும்
தீமேற் படின்கொடுத்தால் கொள்வதெவன் - ஆமே
நலம்திகழும் செங்கை நயதீரன் எங்கோன்
சிலம்பன் திருவேங் கடன்

என்னும் வினாவுத்தரப் பாடலுக்கு ஆயிரம் பொன்னைச் சிலம்பன் திருவேங்கடன் பரிசிலாகக் கொடுத்தான். அத்துடன் மாலையும் கொடுத்தான் (நன்னூல், மயிலைநாதர் உரை 288).

புத்தூர் வேள்

இடமண் டியயாப் பருங்கலநூல்
          எனும்கா ரிகையில் பதித்தமணித்
தடமண் டியதா மரையின்எனும்
          தமிழ்போல் உலகம் தனில்உண்டோ
திடமண் டியஅத் தமிழ்க்குதவும்
          சீமான் செழும்தென் மண்டலமும்
வடமண் டலமும் பரவுபுத்தூர்
          வளம்சேர் சோழ மண்டலமே
88

புத்தூரில் வேளாண்குலச் செம்மல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவனைப் புலவர் பலர் பாடிப் பரிசில் பெற்றனர். ஒரு புலவன் பாடிய பாடல் மிகவும் இனிமையாக இருந்தது. அப்பாடலை யாப்பருங்கலத்தில் அமிதசாகரர் இருகுறள் நேரிசை வெண்பாவுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டினார் (யாப்பருங்கலவிருத்தி 60).

தடமண்டு தாமரையின் தாதாடு அலவன்
இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்து
ஊழி நடாயினான் ஊர்

என்பது அப்பாடலாகும் (பெருந்தொகை 2140).