பக்கம் எண் :

சோழமண்டல சதகம்63

கருணாகரன்

பூதம் பணியச் சீட்டெழுதிப்
          பொருளாய் லட்சம் பொன்கொடுத்த
ஓதும் பூத மங்கலவாழ்வு
          உடையான் ஈதல் உடையானே
காதல் சேரும் கடாரமெலாம்
          கண்ட கருணா கரப்பெருமான்
மாது பாகன் திருப்பணிக்கே
          வைத்தார் சோழ மண்டலமே
89

திருவாரூரில் பூதமங்கலத்தான் என்னும் வறியவன் ஒருவன் வாழ்ந்தான். அவன் மகன் கருணாகரன். பூதமங்கலத்தான் இறந்துவிட்டான் சிறுவன் கருணாகரன் செல்வனாவான் என்பதைத் தன் மந்திர சக்தியால் அறிந்த ஒருவன் வந்து கருணாகரனிடம் ஒரு லட்சம் பொன் கேட்டான்.

கருணாகரன் நகைத்து ஒரு காசுகூட இல்லாத என்னிடம் சீட்டெழுதி ஒரு லட்சம் பொன் கேட்கிறாயே என்றான். பின் கருணாகரனுக்காகச் செல்வத்தைக் காத்து நிற்கும் பூதத்திடம் சென்று பொன்பெற்றுச் சென்றான்.

பின் பூதம் வேண்டக் கடாரங்கொண்டானிலிருந்து பொற்குவியல் பெற்றுக் கருணாகரன் செல்வன் ஆனான். பெரும் செல்வத்தை திருவாரூர்ச் சிவாலயத்திற்கு அளித்தான்.

முட்டம் உடையான்

கொட்டம் உடையான் கீழக்கோ
          புரமும் மதிலும் குறித்தமைத்தே
முட்டம் உடையான் மகபூசை
          முழுதும் உடையான் மொய்ம்புடையான்
பட்டம் உடையான் காவிரிப்பூம்
          பதியும் உடையான் பரிந்தகுடை
வட்ட நிழலில் குளிர்ந்ததன்றோ
          வளம்சேர் சோழ மண்டலமே
90

முட்டம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய ஊர்களின் தலைவனான முட்டம் உடையான் திருவாரூர்க் கோயிலில் கீழக் கோபுரத்தையும், மதிலையும் கட்டினான்.