காவிரி, சோழர் நாடு எந்த நதியைப் புகழ்ந்தாலும் இதுகா வேரிக்கு இணையென்பார் எந்த அரசைப் புகழ்ந்தாலும் இவனே சோழற்கு இணையென்பார் எந்த நாட்டைப் புகழ்ந்தாலும் இதுவே சோணாடு எனஇயம்ப வந்த விசிட்டம் ஓங்கியது வளம்சேர் சோழ மண்டலமே | 11 |
எல்லா ஆறுகளைக் காட்டிலும் காவேரி சிறந்தது. எல்லா அரசரினும் சோழர் சிறந்தவர். எல்லா நாடுகளிலும் சோழநாடு சிறந்தது. தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ தும்சோழ மண்டலமே என்று கம்பர் பாடியதாகக் கூறப்படும் தமிழ்நாவலர் சரிதைப் பாடல் கூறும் (25). முரசு முழங்கு தானை மூவ ருள்ளும் அரசுஎனப் படுவது நினதே பெரும என்று சோழனைப் புறப்பாடல் பாராட்டுகிறது (35). சங்க இலக்கியத்துள் ‘தண்சோழ நாடு’ (புற. 382), ‘சோழ நல்நாடு’ (புற. 67) ‘நெடுஞ்சோழ நாடு’ (பட். 28) என்று சோழ நாடும், ‘வளம்கெழு சோழர்’ (குறு. 116), ‘மறம் கெழு சோழர்’ (நற். 400), ‘கொற்றச் சோழர்’ (நற். 10) என்று சோழரும் பாராட்டப் பெற்றுள்ளனர். சோழநாட்டை காவிரி நாடு என்றும், சோழனைக் காவிரி நாடன் என்றும் சிலம்பு பாராட்டும். (சிலப் 1 : 5). |