திருவரங்கம் கரங்கள் நாபிச் செழுங்கமலம் காட்ட வடிவம் கார்காட்ட அரங்க நகர்வாய் நம்பெருமான் அமர்ந்தார் என்பது அறியாரோ தரங்க வேலை இலங்கையர்கோன் தனக்கும் புவியோர் தங்கட்கும் வரங்கள் தரும்வை குந்தம்அன்றோ வளம்சேர் சோழ மண்டலமே | 8 |
ஒருகால் பிரமன் திருமாலை நோக்கித் தவமிருந்தான். அவர் கூர்மாவதாரமாகத் தோன்றிப் பிரணவத்தையும், அட்டாக்கரத்தையும் உச்சரிக்க அருளினார். பிரமன் அவ்வாறு செய்யக் கார்வண்ணன் கோயில் தோன்றியது. சென்று வணங்கிய பிரமன் மீண்டும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டான். இட்சுவாகு தேவலோகம் சென்று மணிவண்ணனைக் கொணர்ந்து அயோத்தியில் தாபித்தான். தர்மப்பிரபு என்னும் சோழன் அம் மணிவண்ணப் பெருமானைச் சோழநாட்டில் தாபிக்கத் தவமிருந்தான். இராவண சம்மாரத்திற்குப் பின் இராமன் அயோத்தியில் அசுவமேத யாகம் செய்கையில் சென்று வந்த சோழன் தர்மப்பிரபு சோணாடு வந்து திருவரங்க நகரை எழிலுறச் செய்தான். வீடணன் அயோத்தியிலிருந்து அரங்கநாதப் பெருமாளை ஆன்மார்த்த மூர்த்தியாகப் பெற்று இலங்கை கொண்டு செல்கையில் திருவரங்கம் சந்திர புட்கரணிக் கரையில் வைத்துப் பூசித்தான். சோழ மன்னன் அப்போது ஒன்பதுநாள் விழாக் கொண்டாடினான். பின்னர் வீடணன் இலங்கை செல்லும் போது எடுக்க முயன்றும் அரங்கநாதப் பெருமானை எடுக்க முடியவில்லை. அங்கேயே அவர் குடிகொண்டார் என்பது வரலாறு. ஒன்பது தீர்த்தங்கள் உள்ள புனிதத்தலம். அரங்கம் என்பது ஆற்றுடைக்குறை. காவிரி, கொள்ளிடத்திற்கு இடைப்பட்ட தலம். |