திருவாரூர் அந்நாள் தமிழ்க்குத் தூதுசென்ற ஆதிக் கடவுள் அணிஆரூர் பொன்நாட் டினுக்கும் அதிகம்என்று போந்தார் இதன்மேல் புகழும்உண்டோ? எந்நாட் டினுக்கும் அதிகம்என்றும் இதற்கார் உளர்ஏற் றம்என்று மன்னாட் டியசீர் பெற்றதன்றோ வளம்சேர் சோழ மண்டலமே. | 7 |
ஒருமுறை சிவபெருமான் தம் உருவைக் கண்ணாடியில் பார்த்தார். கண்ணாடியில் பார்த்த அழகு உருவைக் கண்டு சுந்தரனே வா என்றார். சுந்தரர் தோன்றினார். தேவ- அசுரர்கள் அமிர்தம் கடையும்போது விடம் தோன்றியது. தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவ்விடத்தை எடுத்து வருமாறு சுந்தரரை வேண்டினார். ஆலத்தை -விடத்தை எடுத்து வந்த சுந்தரர் ஆலாலசுந்தரர் ஆயினார். சிவபெருமானின் அணுக்கத் தொண்டராகிய ஆலாலசுந்தரர் அங்கு நந்தவனத்தில் பூக்கொய்ய வந்த கமலினி, அநிந்திதை ஆகியோரைக் கண்டு காமுற்றார். சிவபெருமான் அருளால் ஆலாலசுந்தரர் தம்பிரான் தோழர், ஆரூரர் என்று பெயர் பெற்றுத் திருவாரூரில் வாழ்ந்தார். கமலினியார் பரவையார் என்னும் பெயரில் அங்கு வாழ அவரை மணந்து இல்வாழ்க்கை நடத்திய சுந்தரர் பின்னர் ஒற்றியூரில் வாழ்ந்த அநிந்திதையாரான சங்கிலியாரையும் மணந்தார். அதனால் ஏற்பட்ட ஊடலில் பரவையார் கோபித்துக் கதவடைத்தார். சுந்தரரின் தமிழ்ப் பாடலால் கட்டுண்ட சிவபெருமான் சுந்தரர் பொருட்டுப் பரவையாரிடம் தூது சென்றார். கல்வெட்டில் திருவாரூர் வீதி ஒன்று ‘திருவடிப் போது நாறிய திருவீதி’ என்று கூறப்படுகிறது. தேவர்களை வருத்திய அசுரர்களை வென்று முசுகுந்தச் சோழனுக்குத் தேவேந்திரன் தான் திருமாலிடம் பெற்ற தியாகராசப் பெருமானை அளித்தார். முசுகுந்தன் அம்மூர்த்தியைத் திருவாரூரில் பிரதிட்டை செய்தான். இளமுருகு உடன்உறை அம்மை அப்பன் வடிவே தியாகராசர் உருவம். தியாகராச மூர்த்தத்தை உடைய தலங்கள் ஏழு. சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு காரால் மறைக்காடு காராயில் - பேரான ஒத்த திருவாய்மூர் உவந்ததிருக் கோளிலி சத்த விடங்கத் தலம். என்பது பழம்பாடல். திருவாரூர் அரநெறி, திருவாரூர்ப் பூங்கோயில், திருவாரூர்ப் பரவையுண்மண்டளி என்ற தேவாரத் தலங்களை உடைய ஊர். நமிநந்தியடிகள் சமணர் பொருட்டாக நீரில் விளக்கெரித்த ஊர். விறன்மிண்டார் திருப்பணி செய்த தலம். கழற்சிங்க நாயனார் முத்தி பெற்ற தலம். |