பக்கம் எண் :

4சோழமண்டல சதகம்

சிதம்பரம்

எல்லா உயிர்க்கும் சிவகலைக்கும்
          எய்தும் ஒடுக்கம் சிதம்பரமே
அல்லாது இல்லை அத்தலமே
          அவனி தாங்கும் அருட்புருடன்
சொல்லார் இதய கமலம்எனத்
          தோன்ற இருந்த தொன்மையினால்
வல்லார் பணியத் தக்கதன்றோ
          வளம்சேர் சோழ மண்டலமே.

6

உலகில் உள்ள எல்லா உயிர்களும், சக்தியும் சென்று அடையத்தக்க ஓரிடம் சிதம்பரம் ஆகும். சிதம்பரம் உலகத்தைத் தாங்கும் அருட்புருடன், நடுநாயகமானது. மிகவும் தொன்மையானது. தில்லை வனத்தில் நடராசப் பெருமான் உறைவதால் ஊரும் தில்லை ஆயிற்று. திருச்சிற்றம்பலம் - சிற்றம்பலம் என்ற பெயரே சிதம்பரம் ஆயிற்று என்பர். அங்கு கனகசபையில் நடராசப் பெருமான் ஆனந்தநடனம் புரிகிறார். இறைவி சிவகாமியம்மை, பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் வழிபட்ட இடம்.

சிதம்பரம் நடராசர் சோழருக்குக் குலதெய்வம் ஆவார். சோழர்களிற் சிலர் அங்கு பொன் வேய்ந்துள்ளனர். திருமுறை காக்கப்பட்ட இடம்.

மாணிக்கவாசகர் தம் திருமேனியோடு வெளியில் கலந்த புனிதத்தலம், நந்தனார் முக்தியடைந்த திருத்தலம். திருநீலகண்ட நாயனார் உமாபதி சிவாச்சாரியார் முதலியோரும் இங்கு வீடு பெற்றனர்.