பக்கம் எண் :

சோழமண்டல சதகம்3

நூல்

காவிரியாறு

பொன்பூத் தமலர்க் கொன்றைமுடிப்
          பொழிமும் மதத்துப் பொலிமருப்பு
மின்பூத் தகரா சலமுகத்து
          மேலோன் சோழ விநாயகனே
தென்பூத் தருள்கா விரிபெருகச்
          செய்து நாளும் செழிப்பேற
வன்பூத் தழைந்து வளர்வதன்றோ
          வளம்சேர் சோழ மண்டலமே

4

சூரபன்மனால் விரட்டப்பட்ட இந்திரன் சீர்காழியில் நந்தவனம் அமைத்துச் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வந்தான். ஒருமுறை மழையின்றி நந்தவனம் வாடியது. நாரதர் உபதேசப்படி இந்திரன் விநாயகரை வேண்ட அவர் அகத்தியர் கமண்டலத்தில் உள்ள காவிரிப் பாவையைக் கவிழ்த்தார். அதிலிருந்து காவிரி ஆறு பெருகி சோழ நாட்டில் ஓடி வந்தது. இந்திரன் நந்தவனங்கள் செழித்தன. அவ்வாறு வந்த காவிரியால் சோழநாடு நாளும் வளம் பெற்றது.

காவிரி வளத்தால் சோழநாடு ‘நீர் நாடு’, ‘புனல் நாடு’ எனப்பட்டது. சோழநாடும் சோறுடைய நாடாகப் புகழப்பட்டது. சோழரை ‘காவிரி புரக்கும் நாடுகிழவர்’ என்று சங்க இலக்கியம் பாராட்டும், சோழர் காவிரியின் தந்தையர் என்றும், காவிரிப் பாவையின் புதல்வர் என்றும், காவிரியின் கணவர் என்றும் புலவர்கள் பாடி மகிழ்ந்தனர்.

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை

என்று மணிமேகலை காவிரியைப் புகழும் (பதிகம் 24-25).

சுவாமிமலை

வெள்ளி வரையில் ஓர்சிகரம்
          விளங்கும் திருஏ ரகமலையாய்த்
தெள்ளு தமிழ்க்கீ ரனும்புகழச்
          சிறந்தாய் இடையே சிவன்தெளிய
உள்ள படியே மெய்ப்பொருளை
          உணர்த்தும் குரவன் உயர்சாமி
வள்ளல் மகிழும் திருஇருப்பு
          வளம்சேர் சோழ மண்டலமே.

5

வெள்ளி மலையில் சிகரம் ஒன்று சோழ நாட்டின் விழுந்து ஏரகம் என்னும் மலையாயிற்று. அறுபடை வீட்டில் ஒன்றாகிய திருவேரக முருகன் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கினார். அதனால் ஏரக முருகன் சுவாமிநாதன் எனப்பட்டார். அதனால் ஏரகம் குருகிரி, குருமலை, குருவெற்பு எனப்பட்டது.

ஏறக்குறைய 20 மீட்டர் உயரமுள்ள செய்குன்றே ஏரகம். 60 படிகள் உள்ளன. இவற்றைத் தமிழ் வருடங்கள் அறுபதினோடு ஒப்பிடுவர். இங்கு முருகனுக்கு யானை வாகனம் உள்ளது. ‘பிணிமுக ஊர்தி ஒண் செய்யோன்’ என்று புறநானூறு (46) கூறும். பூமகளே இங்கு தலவிருட்சமாக (நெல்லிமரம்) உள்ளாள்.

ஏரகம் என்பது சேலம் மாவட்டத்துத் திருச்செங்கோடு என்றும், நாஞ்சில் நாட்டு வேழிமலை என்றும், குடகில் உள்ள சுப்பிரமணியத்தலம் என்றும் வேறு கருத்துகளும் உள்ளன. அருணகிரிநாதர் சோழ நாட்டுச் சுவாமி மலையையே ஏரகம் எனக்கொண்டு,

நதியில் காவிரி ஆற்றுக் குள்ளே
பயில்வளமைச் சோழ நன்னாட்டுக்குள்
ஏரக நகர்

காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே

என்று பாடியுள்ளார்.