வாழி சத்திரிபதியாம் சகசிமக ராசன் வாழி தஞ்சைநகர் வாழிசமஸ் தானம் வாழி அத்தர்பொன்வைத் தவரும்அகி லாண்டம் வாழி அருள்வாழி இசைந்தரா மப்பர் வாழி உத்தமவே ளாளர்குல உயர்சித் தாமூர் ஊரிலுள்ளோர் அனைவர்களும் உவந்து வாழி வைத்தசோ ழியர்குடிகள் அனைத்தும் வாழி வையகமெல் லாம்தழைத்து வாழி தானே | 105 |
சகசி அரசர் (1684 - 1711), தஞ்சை நகரம், சமஸ்தானம் சித்தாமூர் பொன்வைத்த நாதர், அகிலாண்டவல்லி, இராமப்பர் சித்தாமூர் வேளாளர்கள், சோழியக் குடிகள் ஆகியோருக்கு வாழ்த்துக் கூறப்படுகிறது. நூல் இயற்றிய காலம் சீர்கொள் பிரபவ வருடம் திகழும் இடபத் திங்கள் நார்கொள் இருபான் தேதி நவிலும் பானு வாரம் கார்கொள் அமர பக்கம் கருதும் தசமி திதியே ஏர்கொண்டு இலங்கும் இருபத்து ஏழாம் நட்சத் திரமே | 106 |
இன்னண ஆய நாளே எழுதினான் கன்னல் வேளூர் மன்னிடும் ஆன்ம நாத மாப்பெரும் குரவன் ஆவான் மன்னிய வளம்சூழ் சோழ மண்டல சதகம் தன்னைச் சொன்னநூற் றைந்து பாவாய் சொல்லினில் துலங்க மாதோ! | 107 |
19.5.1723 அன்று வேளூர் ஆத்மநாத தேசிகர் ‘சோழமண்டல சதகம்’ என்னும் இந்நூலை 105 பாக்களில் எழுதி முடித்தார். முதல் பாடலில் காணும் பஞ்சாங்கக் குறிப்புக்கள் அனைத்தும் சோபன (1723-24) ஆண்டிற்குப் பொருந்தி வருகிறது. பிரபவ (1726 - 27) ஆண்டுக்கு பொருந்தி வரவில்லை. எனவே சோபன ஆண்டே கொள்ளப்பட்டது. |