பக்கம் எண் :

சோழமண்டல சதகம்9

காவிரி

அங்கார் பொழிய வரும்செழுநீர்
          அநந்த கோடி நதிகளுக்குள்
இங்கார் நதிகள் ஓரேழும்
          இசைக்கில் அதிகம் ஏழினுக்கும்
கங்கா நதியே அதிகம்அதன்
          கன்மம் தொலைக்கும் காவிரியே
மங்கா அதிகம் எனும்நாடு
          வளம்சேர் சோழ மண்டலமே
12

பல ஆறுகள் இருப்பினும் அவற்றுள் ஏழு ஆறுகளே சிறப்பானவை. அவற்றுள் கங்கை தலைமையானது. சிறந்த கங்கையும் தன் பாவம் தீரக் காவிரியில் மூழ்கியது என்று கூறும் காவிரி மான்மியம்.

திருவையாற்றில் காவிரியில் எறிந்த எலும்பு மலர்கள் ஆயின என்றும், திருமுல்லைவாயிலில் காவிரியில் எறிந்த எலும்பு இரத்தினங்கள் ஆயின என்றும் அவ்வத் தலபுராணங்கள் கூறும்.

கங்கையிற் புனிதமாய காவிரி

என்பது தொண்டரடிப்பொடியாழ்வார் வாக்கு (திருமாலை. 23), ‘கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி’ என்பார் நச்சினார்க்கினியர் (தொல். பாயிர உரை). காவிரிநீர் கங்கை நீரே என்பார் அடியார்க்கு நல்லார் (சிலப். 10 : 148 - 155 உரை).