எல்லைகள் செல்லும் குணபால் திரைவேலை தென்பால் செழித்த வெள்ளாறு வெல்லும் கோட்டைக் கரைவிளங்கும் மேல்பால் வடபால் வெள்ளாறே எல்லை ஒருநான் கினும்காதம் இருபா னான்கும் இடம்பெரிதாம் மல்லல் வாழ்வு தழைத்தோங்கும் வளம்சேர் சோழ மண்டலமே | 10 |
கிழக்கே கடல், தெற்கே வெள்ளாறு, மேற்கே கோட்டைக்கரை (மதிள்கரை - மதுக்கரை), வடக்கே வடவெள்ளாறு ஆகியவை சோழநாட்டு எல்லைகளாம். இதனைக் கீழ்வரும் கம்பர் பாடல் விளக்கும் (சோழமண்டல சதகம். 10 மேற்கோள்). இதனை ஒளவையார் பாடல் என்றும் கூறுவர். கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் சோணாட்டுக்கு எல்லைஎனச் சொல் ‘ஏணாட்டு வெள்ளாறு’ என்ற தொடருக்கு ‘ஏணாட்டுப் பெண்ணை’ என்ற பாடபேதமும் உண்டு (சோழன் பூர்வ பட்டயம் ப. 228). பெண்ணைக்குப் ‘பண்ணை’ என்று மு. இராகவையங்கார் பாடம் கொள்வார் (பெருந்தொகை 2093). ‘காதம் இருபத்துநான்கு’ என்பது தனிப்பாடல் பகுதி. 26-1-1518-ஆம் ஆண்டைச் சேர்ந்த கிருஷண்தேவராயனின் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சேந்தமங்கலம் கல்வெட்டில் நடுவில்மண்டலம் உட்படச் சோழநாட்டின் எல்லை கூறப்படுகிறது. ‘கெடில ஆற்றுக்குத் தெக்கு ஸமுத்திரத்துக்கு மேக்கு தெர்க்கு வெள்ளாற்றுக்கு வடக்கு கோட்டைக்கரை மதுக்கரைக்குக் கிழக்கு’ என்று கூறப்படுகிறது. (SII VIII - 352). தேவாரத் தலங்கள் தொண்டை நாட்டில் ஆறைந்து தொடர்ந்த பாண்டி பதினான்கு கொண்டல் ஈழம் தனில்இரண்டு கொங்கில் ஏழு துளுஒன்றே தண்து ழாயின் பசும்தொடையார் தவள விடையார் தலம்பலவும் மண்டு பாதி நெடுங்கோயில் மருவும் சோழ மண்டலமே | 14 |
தொண்டை நாட்டுச் சிவத் தலங்கள் முப்பது. பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் பதினான்கு. ஈழநாட்டுச் சிவத்தலங்கள் இரண்டு. கொங்கு நாட்டுச் சிவத்தலங்கள் ஏழு. துளு நாட்டுச் சிவத்தலம் ஒன்று. ஏனைய சிவத்தலங்கள் அனைத்தும் சோழமண்டலத்தைச் சேர்ந்தனவே. சோழநாட்டில் 190 பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கையில் காணலாம். தொண்டைநாட்டில் 32 தலங்கள் உள்ளன. நடுநாட்டுத் தலங்கள் 22; மலைநாட்டுத் தலம் ஒன்று. ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்வியதேசங்களில் 40 தலங்கள் சோழநாட்டில் உள்ளன. |