அடியார்கள் பொறையார் தில்லை வாழ்முனிவர் புகலிப் பெருமான் சண்டீசர் நிறையார் கலையார் பூசலையார் நீல நக்கன் புகழ்ச்சோழன் முறையார் ஞானத் திருஅகவல் மொழிந்த கபிலர் முதலாய மறையோர் எவரும் இமையோராய் வாழும் சோழ மண்டலமே | 15 |
தில்லை நடராசருக்குப் பணிவிடை புரியும் தில்லை மூவாயிரவர், புகலிப் பெருமானான திருஞானசம்பந்தர், சண்டிகேசுவரர், பூசலார் நாயனார், நீலநக்க நாயனார், சோமாசி மாற நாயனார், ஞானத் திருஅகவல் பாடிய கபிலர் முதலிய வேதம் வல்ல அடியாரான மறையோர் பலர் சோழநாட்டில் வாழ்ந்தனர். இங்கு அந்தணர் மரபைச் சேர்ந்த சிலர் கூறப்பட்டுள்ளனர். பூசலார் தொண்டை நாட்டினர். |