திருமடங்கள் சேணார் பரியே றும்பெரியோர் தெய்வப் படிமப் பதம்வைத்தோர் கோணா நிலைமை மாணிக்கக் கூத்தர் காளைக் குருராயர் பூணார் சைவ ராயருள்ளார் பொன்னங் கிரியில் புரிமடமும் மாணாக் கரும்சூழ் திருஇருப்பு வளம்சேர் சோழ மண்டலமே | 16 |
கரிகால் பெருவளத்தான் வடநாடு யாத்திரை சென்று திரும்பிய காலத்துஐந்து மடாதிபதிகளை அழைத்து வந்தார் என்பர். அவர்கள், பரியேறும் பெரியோர் தெய்வப் படிமப் பதம் வைத்தோர் மாணிக்கக் கூத்தர் காளைக் குருராயர் சைவராயர் எனப்படுவர். இவர்கள் மாணாக்கர்கள் சூழ இருப்பர். இவர்கள் ‘ஐந்து கொத்தார்’ எனப்பட்டனர். இவர்கள் தலைமைத் தலம் திருவிடைமருதூர் ஆகலாம். திருவிடைமருதூர் மருதவாணர் மாணிக்கவாசகற்குத் திருவடி தீட்சை அளித்தார். இதனை, இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்தஅப் பரிசும் என்ற அவர் வாக்கால் அறியலாம் (2:75-76). இம்மடாதிபதிகளின் வாரிசுதாரர்களுட் சிலர் இன்றும் திருவிடைமருதூரில் உள்ளனர் என்பர். சிவனுக்குக் கொடை எந்தக் குலத்தில் பிறந்தோரும் இரப்போர் கரத்தில் ஈவதல்லால் அந்தக் கடவுள் மானேந்தும் அங்கை ஏற்ப அளித்ததுண்டோ? சிந்தைக்கு இனிய சோழியரே சிவன்பால் அளித்த சீர்த்தியினால் வந்தித் திடும்பேர் பெறுந்தேசம் வளம்சேர் சோழ மண்டலமே | 17 |
எக் குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இரவலர் கையில் ஈவதே உலக மரபு. மானை ஏந்தியுள்ள சிவபெருமான் திருக்கரங்களிலேயே கொடை அளித்த பெருமை சோழநாட்டு வேளாளரையே சாரும். |