பக்கம் எண் :

22திரு அவதாரம்

 

133.       அதிசய மடைந்தன ரவர்சொலுவ துணர்ந்தவ ரனைவரு மவருடைய
              மதியதுஞ் சிறந்தவுன் னதஞானம் மதியொடு வினவுகின் றதுமறிந்தே
              அதிசய மடைந்தன ரிருவருமே அவரவணி ருப்பதை யறிந்தவரே
              நிதிமிக வடைந்தவர் தமைநிகர்த்தார்நி மலனின் மதிமுகந் தெரியவுமே.

134.       "அப்பா மகனே என்செய்தாய் அதிமிகு கவலையே யிழைத்தனையே
              அப்பா வொடும்யான் இருவருமாய் அலைந்துதே டினோமே கவலையொடே"
              "அப்போற் கவலைநீ ரடைவதற்கே அவசிய மிலையே எனதுடைய
              அப்பா வுடையதாம் விடயங்களி லிருப்பதே யவசியம் அறிந்திலீரோ"?

135.       அறிந்தன ரிலையவ ரிருவருமே அன்னவர் மொழிந்ததின் கருத்தினையே
              பிரிந்தனர் எரிசலை நகரதையே பிள்ளையோ டைந்தனர் பதிநசரேத்
              இருந்தனர் பணிவோ டிருவருக்கும் ஏவிய பணிவிடை புரிந்தவர்க்கே
              இருதயந் தனிலமைத் திருந்தனரே இவ்விட யமெல்லாம் இவரனையோ.

(3) நாசரேத்

136.       இவ்வித மருட்டிரு பரன்சேசு இளைமையி லிருந்தே சீர்மிகவாம்
              திவ்விய ஜீவிய லக்கெதென மிகத்தெளி வாயறிந் தேயிருந்தார்
              அவ்வித நோக்கமே நிறைவுறவே அடைந்தனர் பக்குவம் பல்வகையில்
              செவ்விய தமதுட வூழியமே செய்யவே தக்கவ ராயினரே.

137.       கல்வியே பயில்கிற தினங்களுமே கடந்தபின் னவருளே யெவரெனினும்
              அல்லலே பின்னணு காதிருக்க அமர்ந்தொரு தொழிலெதும் பழகுவதாம்
              இல்லவர் பேரில மர்ந்ததொரு இசைந்துள கடமையொன் றிருப்பதினால்
              நல்லதோர் தொழிலாந் தச்சுவேலை புகுந்துமே பயின்றனர் நலமிகவே.

138.       தாயினே வலெதும் புரிவரயோ தமதுட அகமதிற் றவறாதே
              காயமாந் தமதுட தொழிலதையே கணக்கொடு புரிந்துபட் டறையினிலே
              சாயுமாம் பொழுதே வருஞ்சமையம் தனித்தொரு தலமதிற் கடவுளுட
              சேயிவர் தந்தையர் பரனொடுமே கழிப்பரே தனிஜெப த்யானமதில்.

139.       சாதுவாம் நலமிகு குணமுளோரே சாந்தமுள் மனுமகன் ஜேசுபரன்
              ஏதெனு மிலதவ ரெளியவர்க்கே யேதெனு முதவவே முன்வருவார்
              ஏதுமே தீவினை யெவர்களுக்கும் செய்யவே மனமுமே கொள்வதில்லை
              ஏதுமே தீவினை யறிந்தாலோ ஏங்குவர் துயர்மிகக் கொள்ளுவரே.