பக்கம் எண் :

திரு அவதாரம்65

 

13.         இப்படிக் குணமார் குளமிது கலங்கும் எனஇவண் கவனமா யிருக்க
              அப்பொழு தெனையே அதனுளே யிறக்க எவருமு தவியிலை யெனக்கே
              எப்பொழு தெனினும் எவன்பிற னொருவன் எனக்குமுன் னிறங்கியே விடுவான்
              இப்படி யிருக்க சுகம்பெற லெவிதம் எனச்சொலி பரிதபித் தனனே.

14.         அழுதவ ரமுதம் அடைவரென் பதுபோல் அன்பரின் திருவரு ளடைந்தான்
              எழுந்துனின் படுக்கை யெடுத்துன தகமே யேகுவா யெனவுரைத் தனரே
              எடுத்தவன் படுக்கை யெடுத்துமே நடந்தான் ஏகினன் மிகமகிழ் வொடுமே
              தொழுதவன் தனது படுக்கை சுமந்தே சென்றதோர் தினமோய் தினமே.

15.         படுக்கை யெடுத்தே நடப்பதை யறிந்தார் யூதரும் பரிசெயர் பிறரும்
              எடுத்துநீ சுமந்தே நடக்குமித் தினமே ஓய்வுநா ளிதுசரி யிலையே
              துடுக்கொடும் வினவ மறுமொழி யுரைத்தான் நற்சுக மருளினோ ரெனையே
              படுக்கை யெடுத்தே நடவெனப் பகர்ந்தார் ஈதை சுமக்கிறேன் எனவே.

16.         இப்படி நடவென் றிசைத்தவன் எவனோ இயம்புவாய் எனவின வினரே
              அப்படித் தனக்குச் சுகமளித் தவரோ எவரென அவனுமே யறியான்
              குப்பலாய் ஜனங்கள் அதுதலத் தினிலே குழுமியே யிருந்தகா ரணமாய்
              அப்படி யவணின் றவர்களை விடுத்தே யகன்றன ரருட்குர பரனே.

17.         அதன்பினா லொருபோ தவனையே கண்டார் அழகிய தெய்வா லயத்தில்
              சுதன்நீ யடைந்தாய் சுகமிப் பொழுதுன் சுகத்தைக் கவனியெச் சரிக்கை
              இதனிலும் பெருங்கே டடையா திருக்க இனிப்பவஞ் செயே லென்றனரே
              இதனையே யறிந்தோன் சுகமளித் தவர்யார் எனஅறி வித்தன னவர்க்கே.

18.         அருட்குரு இவற்றை யோய்வுநா ளதிலே அருளொடுமே புரிந்திருந் ததனால்
              அருளிலா தவரோ துன்புறுத் தியுமே அவரையே கொலைசெய முயன்றார்
              திருப்பர னெனது பிதாஇது வரைக்கும் கிரியைசெய் துவருகின் றதுபோல்
              கிருபையாங் கிரியை யானுமே யியற்றி வருகிறேன்கிரு பையாய் எனவே.

19.         கடவுளின் தினத்துக் குரியகற் பனையைக் கடந்துமே மீறியுந் தவிர
              கடவுளைத் தமது சுயபிதா வெனவுங் கடந்ததாம் வார்த்தை யுரைத்தே
              கடந்துநிற் பவராங் கடவுளா னவர்க்கே சரிசமஞ் செய்தரென் றுரைத்தே
              இடறியூ தருமே இறைவனைக் கொலவே இவர்மிக வகைதே டினரே.