பக்கம் எண் :


பதிப்புரை


      திருக்குற்றாலக் குறவஞ்சி யென்னும் இந்நூல் திரிகூடராசப்பக் கவிராயரவர்களால் இற்றைக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகட்குமுன் இயற்றப்பெற்ற அரிய நூலாகும்.

      இது, திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானாகிய திரிகூடநாதரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்றது; சொல்லழகு பொருளழகு கருத்தாழம் மிக்கது; ஓசையின்பமும் எளிய இனிய நடையும் வாய்ந்தது.

      இச் சீரிய நூலை, முன்னரே திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வெளியீடாக வெளியிட்டுள்ளனர். ஆயினும் சென்னைப் பல்கலைக்கழகத்தார் இதனை வித்துவான் தேர்வுக்குப்பாடமாக அமைத்துள்ளனர். ஆதலால், உரையுடன் வெளியிடுதல் நலமெனக் கருதி நம் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர்குழுத் தலைவர் பெருநாவலர் திரு.பு.சி.புன்னைவனநாத முதலியாரவர்களையும், செல்லூர்க்கிழார் செ.இராமசாமிபிள்ளை அவர்களையும் கொண்டு பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதுவித்து நன்முறையில் கண்கவர் தோற்றத்துடன் வெளியிட்டுள்ளோம்.

      தமிழ்கூறு நல்லுலக அறிஞர்களும் மாணவர்களும் இதனை வாங்கிக் கற்றும் கற்பித்தும் திருக்குற்றாலக் காட்சியின்பமும், திருக்குற்றாலப் பெருமான் திருவருளும் ஒருங்கே பெற்று இன்புறுவார்களென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்