பக்கம் எண் :

குலாம் காதிறு நாவலர் 3


                     குலாம் காதிறு நாவலர்

     1833 ம் ஆண்டில், குலாம் காதிறு நாவலர் நாகூரில் பிறந்தார். இவர்
தந்தை பெயர் வாப்புராவுத்தர். அறபு, ஆங்கிலம், தமிழ் மொழிகளில்
ஆர்வமுள்ளவராக விளங்கினார் நாவலர். தமது பெரியதந்தை புலவர் பக்கீர்
தம்பி சாகிபின் வேண்டுகோட்படி, நாராயணசுவாமி உபாத்தியாயரிடம் பாடம்
கேட்டுவந்தார். பின்பு, வித்துவான் மீனாட்சி சுந்தரப்பிள்ளையிடமும் பாடம்
கேட்டு வந்தார்.

     மலாயா சென்ற புலவர் அவர்கள், அங்கு ‘வித்தியாவிசாரிணி’ என்ற
பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.

     1901 ம் ஆண்டு பாலவனந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன்
சேர்ந்து, மதுரையில் நான்காவது சங்கம் அமைத்தார். அச்சங்கத்தில்
அரங்கேற்றிய “மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை” இன்றும்
இஸ்லாமியரின் தமிழ்ப் பணிக்கு எடுத்துக் காட்டாக உள்ளது. அன்று
‘நக்கீரர்’ என்னும் புகழ்ப்பெயரையும் பெற்றார்.

     பிரபு மதுரைப் பிள்ளையின் தர்பாரில், புலவரின் நூலொன்று
அரங்கேற்றப்பட்டது. அதில் புலவருக்கு “நாவலர்” என்று புகழ் நாமம்
சூட்டப்பட்டது. நாவலரின் நூலொன்று யாழ்ப்பாணத்திலும்
அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது சுலைமான் லெவ்வை ஆலிம், வித்துவான்
பொன்னம்பலம்பிள்ளை மற்றும் பலரும் அதில் பங்குகொண்டனர்.