பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்37


               கலிநிலைத்துறை
     மாதர் பண்பயின் றாடுறூஉம் மணியரங் கவண
     காத ளாவிய குழையினார் கண்வலை கடந்த
     மாத வத்தினார் மன்னுறு மடங்களும் அவண
     ஓத நீருல கோதுறு சாலையும் அவண.

   (சொ - ள்.) மாதர் பண் பயின்று ஆடு உறூஉம் மணி அரங்கு அவண -
மாதர்கள் பண்ணிசையோடு பாடி ஆடுகின்ற அழகிய ஆடரங்குகள் அந் நகரிடத்துள்ளன;
காது அளாவிய குழையினார் கண் வலைகடந்த மாதவத்தினார் மன்னுறு மடங்களும்
அவண - செவியிற் பொருந்திய காதணிகளையுடைய மாதர்களின் கண்ணோக்காகிய
வலையினுட்படாது காமவிச்சையை வென்ற பெரிய தவத்தினையுடைய துறவிகள்
நிலைத்துறையும் திருமடங்களும் அவ்விடத்துள்ளன ; ஓதம் நீர் உலகு ஓது உறுசாலையும்
அவண - ஒலிக்கின்ற கடல் நீர் சூழ்ந்த உலகிலுள்ளார் பல கலைகளையும் ஓதியுணர்தற்
கிடமான கல்விக் கழகங்களும் அப் பகுதியின் கண்ணே நிறைந்துள்ளன.

   (வி - ம்.) பாடலின்றி ஆடல் சிறவாதாதலாற் "பண் பயின்று ஆடுறூஉம் மணி
அரங்கு" என்றார். காம மயக்கங் கடந்தவரே சிறந்த துறவிகள் ; கூடாவொழுக்கமுடையோர்
போலித் துறவிகள் என்ற கருத்துத் தோன்ற "கண்வலை கடந்த" என்றார். மாதர் கண்,
வலை போலக் காமுகன் பற்றும் இயல்புடையது. அவ்வலையைக் கடப்பது
பெருந்தவத்தோருக்குரிய செயல் என்பது "மாதவத்தர்" என்றார். சிற்றின்பத்துக்குரிய
ஆடரங்குகளும் பேரின்பத்துக்குரிய மடங்களும் இவ்விருவகையறங்களைக் கற்பிக்கும்
கழகங்களும் அந் நகரின்கண் உள்ளனவென நகர்ச் சிறப்புக் கூறினர். (16)

               கலி விருத்தம்
     வண்டிமிர் குழலினார் வதனப் பேரெழிற்
     கெண்டகு முழுமதி யெதிரற் றேகுதல்
     கண்டுமை தீட்டறி குறியைக் காசினி
     மண்டிய களங்கென மயங்கி ஓதுமால்.

   (சொ - ள்.) வண்டு இமிர் குழலினார் வதனம் பேர் எழிற்கு எண்தகு முழுமதி
எதிர் அற்று ஏகுதல் கண்டு - வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையுடைய மங்கையர்களின்
முகத்தின் பெரிய அழகினுக்கு மதிக்கத்தகுந்த நிறைநிலவு விலகிப்