பக்கம் எண் :

பக்கம் எண் :101

குலோத்துங்க சோழனுலா
 


 

254










265









275
ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும்
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம்
தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை
மிக்க பராந்தகனை மீனவனைப் - புக்கார்
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க வணங்கா ளகலாள் - குணங்காவல்
மன்னன் புனையுந் திருமுத்த மாலையை
அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன்

கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும்
பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை
அயிர்க்கு மிறுகோட் டயிரா பதத்தை
மயிற்கு மலையென்னு மன்னும் - குயிற்கிளவி
தேன் வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை
மான்வாழும் மாசின் மதியென்னும் - கோனுடைப்
பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய
பூங்குவளை மாலை புனைகென்னும் - தேங்கமலத்
தற்புத வல்லி யவளே பிறந்துடைய
கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்பார்
பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி
போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய
பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன்
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன்
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும்


 

வரிகள் 254 - 280 : சூழும் நிலைத்தாய் .............அவ்வகை கூராள்

சொற்பொருள் : தன்னை சூழும் நிலைமையுடைய மாதர்க் கூட்டம் நெருங்கவும், தன்மருங்கில் பால்கொடுத்த தாய்மாரும் கையில் எடுத்து வளர்த்த தாய்மாரும் நெருங்கவும், முதன்மையான மாலை பலசூடிய வெண்குடையையுடைய குலோத்துங்க சோழனை, உயர்ந்த பராந்தகன் என்ற பெயர் பெற்றவனை, பாண்டியனை வணங்குவதற்கு வந்தவர் யாவரும் வணங்கியபோது தானும் வணங்கி அவர்கள் துதித்தபோது தானுக் துதித்து அவர்கள் காதலால் வருந்தத் தான் வருந்தாதவளாய் அவ்விடத்தைவிட்டு நீங்காமல் நின்று நற்குணங்களைக் காத்து வரும் அம் மன்னவன் புனைந்திருக்கும் முத்துமாலையை நோக்கித் தன்னுடன் வளரும் அன்னம் படிந்து விளையாடுவதற்குத் தக்க ஆறுஆம் என்றாள். அன்றியும் அவன் கோவையாகிய திருப்பள்ளித் தொங்கற்கூட்டத்தை வளர்க்கும் கிளிக்கும் நாகண வாய்ப் பறவைக்கும் நல்ல பூஞ்சோலையாம் என்றாள். அவள் மலையாவென்று ஐயுற்ற இரு கொம்புடைய அயிராவதம் என்ற யானையை என் மயிலுக்கு இது மலையாம் என்று பொருந்தக் கூறினாள்; குயிலிசைபோன்ற மொழிபேசும் அவள் வண்டுகள் தங்கும் மலர்மாலை சூழ்ந்த தெய்வத்தன்மை வாய்ந்த வெண்குடையைத் தான் வளர்க்கும் மான் வாழ்வதற்குத் தகுதியான களங்கமில்லாத சந்திரன் என்றாள். இம் மன்னனுடைய வனப்புடன் வளைந்த கடல் சூழ்ந்த பூமிதேவிக்குரிய நீலோற்பல மலர்மாலையை எனக்குப் புனைக என்றாள்; தேன்வழியும் தாமரை மலரில் வாழும் திருமகள் பிறந்தபோதே உடன்பிறப்பு உரிமையுடைய கற்பகப்பூமாலையை விரும்பினாள்; அழகு நிறைந்த பொன்னாற்செய்யப்பட்ட புகழ்மகட்கே தகுதியாகிய நந்தியாவட்ட மாலை வேண்டுமென்று கூறி மயங்கினாள். பொன்வளையல் புனைந்த போர்புரியும் ஆரவாரத்திற்குரிய வெற்றி திருமகள் பெற்றிருக்கும் பெருமைதங்கிய ஆத்திமாலை வேண்டுமென்று கூறி மயங்கினாள்; இச் சோழ மன்னனுடைய மகளிர்க் கெல்லாம் பொதுவாகிய பூந்துளவமாலையை எனக்குப் புனைக என்றாள்; அவ்வரசனுக்கு முன் நின்று இவ்வகையாகக் கூறி மயங்கினளேயன்றி மற்றை மங்கையர் காமமயக்க மிகுந்துநின்ற அவ்வகைபோல மயக்கமிகாமல் நின்றாள்.


 

விளக்கம் : நிலைத்து ஆயவெள்ளம் - ஆயம் - மாதர் கூட்டம். வெள்ளம் என்றது அதன் பெருக்கத்தை. "ஈன்றதாயூட்டுந் தாய் முலைத்தாய் கைத்தாய் செவிலித்தாயென வைவகைத் தாயர்" (பிங். 396) ஐவரிலிருவரைக் கூறவே இவரிருவரே பெரும்பாலும் உடன் செல்வோர் என அறிக. குடையிற் பூமாலை, முத்துமாலை, மயிலிறகுமாலை முதலிய பல மாலை சுற்றிலும் தொங்கவிடப்படுவது குறித்து "தாமந்தொக்க கவிகை" என்றார். தாமம் - மாலை. பராந்தகன், மீனவன் ஆகிய குலோத்துங்கசோழனை எனக் கொள்க. பேதைப்பருவம் ஒன்றும் அறியாதவள் ஆதலால் தன்னை நெருங்கி நின்ற மாதர்கள் செய்வனவெல்லாஞ் செய்தாள் என்பது தோன்ற "வணங்க வணங்கி வழுத்த வழுத்தி" என்றார். மற்றை மாதரெல்லாரும் இத்தகைய மன்னனை நாம் கூடிக் கலந்து இன்பம் நுகர்வது என்று வாய்க்குமோ என்று நினைந்து வருந்தினர் எனவும், இப் பேதை அக் காமக்குறிப்பு மனத்தில் நிகழாமையால் வருந்தாதிருந்தாள் என்பது தோன்ற "அணங்க வணங்காள்" என்றார்.

     அணங்குதல் - வருந்தல். அணங்க - வருந்த. "குணம் காவல் மன்னன்" என்றது, தான் காக்கும் நாட்டவர்க்குத் தீக்குணம் ஆகாமலும் நற்குணம் போகாமலும் காவல் செய்பவன் என்று பொருள் தரும். அன்றியும் தன்பால் தீக்குணம் வராமலும் நற்குணம் போகாமலும் காப்பவன் எனவும் பொருள் தரும். முத்துமாலை வெண்மையாக மார்பிற் கிடப்பது அவளுக்கு ஆறுபோலத் தோன்றியது; என்னுடைய அன்னப்பறவை விளையாடுவதற்கு இவ்வாறு வேண்டும்; அதனை வாங்கித் தருக என்றாள்; என்க. கிளியும் பூவையும் அமர்ந்து விளையாடுதற்குத் தக்க பூஞ்சோலையாம். "கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாம்" என்றாள். திருப்பள்ளித் தொங்கற்குழாம் என்பதற்கு டாக்டர் உ. வே. சா அவர்கள் "இது சேறாடி என்னும் ஒருவகை விருது; மயிலிறகாற் செய்யப் படுவது" என்றார். இது (வரி. 165) இலும் வந்தது காண்க. மன்னன் வரும்போது "பள்ளித் தொங்கலும் வரும் என்பது" "குடையோடு களிறு" தொங்கற் குழாங்களும் கொடியின் காடும்" (கம்ப. 1 எழுச்சிப். 56) என்பதனால் அறியலாம். அயிர்க்கும் - ஐயப்படும். யானையை மலையோ என்று ஐயமுற்றாள். தான் வளர்க்கும் மயில் ஏறி விளையாடுதற்கு இம் மலை தக்கதாம், அதனைக் கொடுபோகலாம் என்றாள் என்பது கருத்து. குயிற் கிளவி : அன்மொழித் தொகை, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்தது. குயிலிசைபோலும் கிளவியையுடையாள் என விரித்துக் காண்க. குயில் இசையையுணர்த்துதலால் ஆகு பெயர். தெய்வக்கவிகை என்றது அதன் காவற் சிறப்பைக் காட்டியது. மாசு + இல் + மதி = மாசின் மதி - களங்கமில்லாத சந்திரன். மான் களங்கமுடையது சந்திரன். இது களங்கமில்லாதது. எனது மானை இக் கவிகையில் நிறுத்தினால் அது சந்திரனை யொத்ததாம் என்ற கருத்துப்பட "மான்வாழும் மாசின் மதி" என்றார். அற்புதவல்லி வியப்பான கொடி போன்றவள் என்று பொருள்பட்டுத் தேங்கமலத்து என்ற அடையால் திருமகளை யுணர்த்தியது. திருமகள் பாற்கடலிற் பிறந்தவள். கற்பக மரமும் அவளுடன் தோன்றியது. அதனால் அவளுக்குரிமையானது கற்பகமாலை என்பது விளங்க "பிறந்துடைய கற்பக மாலை" என்றார். உரிமையுடைய எனச் சொல் வருவிக்க. பொலம்புரி - பொன்னாற் செய்த. காஞ்சி - மணிக்கோவை. புகழ்மகள் - இசைத்திரு. புகழ் வெண்மையுடையது;
வலம்புரி மலரும் வெண்மையுடையது. அதனால் "புகழ்மகட்கே தக்க வலம்புரி" என்று தேற்றேகாரம் கொடுத்தார். போர் ஆரவாரப் ‘பொலன்' கொடி என்ற குறிப்பால் வெற்றித்திரு என விளங்கும். பொலன் கொடி - பொற் கொடி போன்ற பெண். போரில் வெற்றி கிடைத்தவுடன் ஆரவாரவொலி யெழும். அவ்வொலிக்குரிய பெண் என்பது குறிப்பு. வெற்றித்திரு சோழ மன்னர்க்குரிய ஆத்திமாலைக் குரிமையுடையவள், எனவே அவள் பெற்ற ஆத்திமாலை என்ற பொருளில் "பெற்றுடைய பேரார மாலை" என்றார். மன்னரைத் திருமாலாகக் கூறுவது மரபு. ஆதலால் சோழனையுந் திருமாலாகக் கொண்டு அம் மன்னனைக் காதலிக்கு மாதர்க்கெல்லாம் துளசி மாலை உரிமையுடையதாம். ஆதலால் அம் மாலை பொதுவாம், என்ற கருத்துப்பட ‘நேரியன் ஏந்திழை........... பூந்துழாய்' என்றார். பார்மடந்தைக்குரிய குவளை மாலையையும் திருமடந்தைக்குரிய கற்பக மாலையையும் சீர்மடந்தைக்குரிய வலம்புரி மாலையையும் போர் மடந்தைக்குரிய ஆர மாலையையும் அச் சோழன்பாற் சென்று வேண்டிப் பெற்று எனக்குப் புனைக என்று பாங்கியர் தாய்மார்களை வேண்டினள் அப் பேதை எனக்கொள்க. குலோத்துங்கன் அத்துணை மாலைகளும் புனைந்திருந்தான்; பூமி முதலிய உரிமைக்கு அறிகுறியாக என உணர்க. புனைக + என்னும் = புனைகென்னும்; எனக்குப் புனைக என்று சொல்வாள் என்று பொருள கொள்க என்பாள்; கால வழுவமைதி, இறந்த காலத்தை எதிர் காலமாகக் கூறியதனால். இவ்வாறே அப் பேதை அம் மன்னனுடைய மாலை ஊர்தி வெண்குடை இவற்றைக் காதலித்து இவ்வாறு கூறி மயங்கினளேயன்றி மற்றை மங்கையர்போல அவன்மேற் காதல் கொண்டு மயங்கினாளல்லள், என்க. பேதை செயல் இது