| வரிகள் 245 - 254 : ஈங்கொருத்தி் .............இளம்பேதை சொற்பொருள் : இவ்வாறு உலாக்கண்ட மங்கையர் பலரும் மயங்கி நிற்க, இவ்விடத்தில் ஒரு பெண், முத்துக்களாற் செய்த சிறிய வளையலணிந்த கையையுடைய நாகணவாய்ப் பறவை போன்றவள்; முழங்கு மேகத்திற்கு முன் ஆடாத மயில் போன்றவள்; மலராக தாமரைப் பூப் போன்றவள்; பேச்சுப் பயிலாத பசிய கிளிப்பிள்ளை போன்றவள்; தலையிற் சூடுவதற்குத் தகத் தளிர்க்காத மாந்தளிர் போன்றவள்; செழித்து வளராத வஞ்சிக் கொடி போன்றவள். வண்டுகள் மொய்க்காத குளிர்ந்த சோலை போன்றவள்; குளிர்ச்சிதராத இளம்பிறை போன்றவள்; முதிர்ந்து விளைந்து இறக்கிக் கொண்டு வரப்படாத தேன் போன்றவள்; வடிவம் விளங்காத கற்பகக் கொடி போன்றவள்; விளங்கும் பூங்கொத்துக்களுடன் முடிக்கக் கூடுவதும் கூடாமையும் ஆகத்தோன்றும் சுருண்ட கூந்தலையுடைய அறிவில்லாத இளமையான பேதைப் பருவ முடையவள் அவள். விளக்கம் : பேதைப் பருவப் பெண்ணொருத்தியின் சிறப்புக் கூறுவது இது. பேதை என்பவள் 5 முதல் ஏழாண்டு முடியும் அகவையுடையாள். காமம் அறியாத சிறு பருவம் அது. முத்து வளையலணிவது சிறு பிள்ளைகட்கு. ஆதலால் முத்திற்புனையும்.......பூவை என்றார், நாகணவாய்ப் பறவை பேசுவதுபோலத் தெளிவில்லாத பேச்சுப் பேசுவாள் என்பது கருத்து. இவள் கண்டோர் நகைப்ப வண்டலிழைத்துக் கழங்குமுதலிய விளையாடித்திரிவள் என்க. கார்மேகங் கண்டவுடன் ஆடுங் கலாப மயில் போன்றவளல்லள். "ஆடாத தோகை" எனவே, சிறகுமுளையாத மயிற்குஞ்சுகள் மேகங்களைக்கண்டு ஆடா; அவைபோல இவளும் ஆடவரைக்கண்டு காமம் எய்தா இயல்புடையவள் என்று குறிப்பிற் கூறியதாம். சூரியன் தோன்றியபோது அந்நாள் மலரும் பருவமுள்ள அரும்புகள்தாம் மலரும். மற்றவை மலரா. அலரும் பருவமடையாத தாமரையரும்பு போன்றவள் எனவே இன்னுஞ் சில ஆண்டுகள் சென்றே காமந்தோன்றும் இயல்புடையாள் என்றதாம். பசுங்கிளிப்பிள்ளை பேசும் இயல்பறியாததுபோல, இவளும் ஆடவரை மயக்கும் பேச்சுக் காற்றறியாதவள் என்பது தோன்றப் படாத பிள்ளைப் பசுங்கிள்ளை என்றார். தலையிற் சூடுவதற்குத் தகுதியில்லாத மாந்தளிரை யொருவருந் தீண்டாது விடுவதுபோல இவளும் ஆடவர் தீண்டுதற்குத் தகுதியுடையவளல்லள் என்பது தோன்ற "சூடத்தளிராத சூதம்" என்றார். வஞ்சிக்கொடி தழைத்து வளர்ந்தபோது அடுத்துள்ள மரங்களைப் பற்றிப்படரும். தழையாத வஞ்சி அடுத்த மரங்களைப் பற்றாது; அஃதேபோல் இவளும் ஆடவரை அறியாதவள் என்பது தோன்ற "தழையாத வஞ்சி" என்றார். குளிர்ச்சி தருவது நிறைநிலாவின் ஒளியாகும்; இளம்பிறை அத்தகைய குளிர்ச்சி தராது; அதுபோல இவளும் ஆடவர்க்கு இன்பந்தரும் இயல்புடையவளல்லள் என்பது தோன்ற "குளிராத திங்கட்குழவி" என்றார். தண்காவிற் பூக்கள் மலர்ந்திருந்தால் வண்டுகள் மதுவையுண்ண விரும்பி ஆங்குச் செல்லும்; பூக்கள் ஒன்றுமின்றெனின் ஆங்கு வண்டுகள் செல்லா; அதுபோலப் பருவமுடையவளாயிருந்தால் ஆடவரனைவரும் விரும்பி மணமுடிக்க வருவர். இவளைக் காதலித்துவருவா ரொருவருமிலர். இவள் பிறராற் காதலிக்கப்படாதவள் என்பது தோன்ற "அளிகள் இயங்காத தண்கா" என்றார். தேன்கூட்டிலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு வந்த தேன் பிறர் நுகர்தற்கு இன்பந்தரும்; தேன்கூட்டில் இருக்கப்பார்த்தால் அஃது இன்பந்தராது. அதுபோலக் காமநுகர்ச்சியின்பத்திற்குப் பயன்படாதவள் என்பது தோன்ற "இறக்காத தேறல்" என்றார். கற்பகவல்லி என்பது கற்பகதருவிற் படர்வது. கண்ணுக்கு விளக்கமாகத் தோன்றாத கற்பகவல்லி கற்பகதருவிற் படரும் இயல்புடையதன்று, அதுபோல் ஆடவரைக் கூடு மியல்புடையவளல்லள் என்பது தோன்ற "வயங்காத கற்பகவல்லி" என்றார். கூழை - கூந்தல், சுருள் - சுருண்டது. கொண்டை எனலும் ஆம். கொண்டையாக முடிக்கக்கூடுவதும் ஆம். ஒருகால் முடிக்கக் கூடாமலும் இருக்கும். அந்நிலைமையுடைய அவள் கூழை என்க. புண்டரிகம்போலக் கண்ணுக்கு இன்பந் தராதவள், கிள்ளைபோலச் செவிக்கு இன்பந் தராதவள், வஞ்சிபோலவும் திங்கட் குழவிபோலவும் சூதம்போலவும், கற்பகவல்லி போலவும் உடற்கின்பம் தராதவள், தண்காவைப்போல் மோப்ப இன்பந்தராதவள், தேறல்போலச் சுவையின்பந் தராதவள் என ஐம்புல நுகர்ச்சி யின்பத்திற்குத் தகுதியற்றவள் என அவள் பருவத்தை விளக்கியவாறாம். தயங்கிணர்க் கூழைச் சுருள் முடிக்க என்பதற்கு ஒளிரும் பூங்கொத்துக்களைக் கூந்தற் கொண்டையில் முடிக்க என்றாவது பூங்கொத்துக்களையுடைய கூந்தலைக் கொண்டையாக முடிக்க என்றாவது பொருள் கொள்க. |