| வரிகள் 240 - 245 : பொருமதனன் .............இனையர்பலர் நிகழ் சொற்பொருள் : போர் செய்யும் காமன் இம் மகளிரைப் பார்த்தானோ? அம்பின்மேல் அம்பாக வந்து தைக்கும்படி யம்புகளையேவினனோ? என்னவென்று சொல்லுவோம். ஆரவாரஞ் செய்தான். வருத்தும்படி செய்தான். கோடிகோடியான கரும்பு வில்லை வளைத்தான். உலகிலுள்ள அரும்புகளை யெல்லாம் எடுத்துத் தொடுத்து எங்கும் இனி அரும்பில்லையென்று சொல்லுவாறு கெடுத்தான். அதனால் இத் தன்மையான மங்கையர் பலரும் உடல் மெலிந்தனர், இத்தன்மையான பல செயல் நிகழ விளக்கம் : "யாதொன்று சொல்லுவோம்" என்பதும், ஆர்த்தான், உளைத்தான், வளைத்தான், மாய்த்தான் - இளைத்தார் என்பதும் நூலாசிரியர் கூற்றாகக் கொள்க. புங்கம் + அனுபுங்கம் - புங்கானுபுங்கம், புங்கம் - அம்பு. அனுபுங்கம் - அடுத்துவிடும் அம்பு; துணையம்பு. பகழி - அம்பு. தூர்த்தானோ - மனைத்தானோ. இஃது அம்புகளால் காமன் மங்கையர் உடல் மறையும்படி செய்தானோ என்ற பொருளைத் தந்தது. உடலில் சிறிதும் இடமின்றி அம்புகள் பாய்ந்து நிறைந்து உடம்பு தோன்றாவாறு மறைத்தல் தூர்த்தலாம். உளைந்தான் - வருந்தினான். இது மெல்லொற்று வல்லொற்றாகி உளைத்தான் எனப் பிறவினைப் பொருளைத் தந்ததாகக் கொள்க. ஒரு கோடி கோடி என்றது அளவிறந்தது என்ற பொருளைத் தந்தது. இக்கு - கரும்பு. "இனைய பல நிகழ" என்பதும் பாடம் இப் பாடத்திற்கு இனைய பல - இத் தன்மையான செயல் பல, நிகழ - மகளிரிடை நிகழ என்று பொருள் காண்க. இனி 245 முதல் 280 வரை ஏழு பருவப் பெண்களில் பேதை என்ற பருவப் பெண்ணின் சிறப்பும் ‘செயலும்' கூறுகின்றார். |