| வரிகள் 232 - 240 : மறுக்காமல் .............வீழ்ந்து பார்ப்பார் சொற்பொருள் : நாம் கூறுவதை மறுக்காமல் நீ சென்று ஒலிக்குங் கடலைத் தூர்த்து அணைகட்டி நின் சிறந்த குலத்திற்கு வந்த பழியைத் தொலைப்பாயாக என்பாரும், இந்நாளளவில் உறங்கும் உறக்கத்தைக் கண்கள் இழந்தன என்பாரும், ஆயர்வாய் வேய்ய் குழலின் றுளையிலெழும் இசையாகிய நஞ்சும் குமிழியாகப் பெருகிவரும் நாள் இனிவருநாள் என்பாரும், பாண்டியமன்னனே! வடகாற்றினும் குளிர்ச்சிதரும் தென்றற்காற்று எங்கட்கு இனிக் கோடையினும் வெம்மையைத் தருவது கொடியது என்பாரும் ஆகி, தேன் ஒழுகும் மலர்நிறைந்த கூந்தலையுடைய மகளிர் ஒருங்குகூடி நெருங்கி மலர் விழிகளாற் பருகுவார் போல விரும்பிப் பார்ப்பவராய் : இனையர் பலர் நிகழ (245) எனக் கூட்டுக. விளக்கம் : மகளிர் காம மயக்கத்தால் இராமன் என்றே நினைத்துக் கூறியது இது. இராமன் இவன் என ஒருத்தி கூறியவுடனே மற்றொருத்தி அவனை நோக்கி "இராமா நீ இங்குத் தங்க வேண்டா; போ என்று நாம் கூறுகின்றோம். எங்கள் சொல்லை மறுக்காமற் செல். சென்று கடலைக் கெடுத்துவிடு. சீதையைச் சிறைமீட்டி நின் குலத்திற்கு வந்த பழியை முன்னர்த் தொலைத்தது போல இப்போது நாம் இறந்துபடும் பழியும் தொலைப்பாய் நீ என்றாள் எனக்கருத்துக்கொள்க. கடலைத் தூர்ப்பது கடலொளியை யடக்குவதாம். கடலொலியடங்கின் நாம் பிழைப்போம்; நினக்குப் பெண்பழியும் நீங்கும் என்று குறிப்பாற் கூறியதாயிற்று. சோழர் குலம் இதுகாறும் பழியில்லாத குலம் என்பது விளக்கத் "திருக்குலம்" என்றார். இன்றளவும் - இந்நாளளவில்; நின் பவனி கண்ட நாள் முதல். இந்நாள் முதல் எம்கண் துயிலிழக்கும் என்றுரைப்பார், தெளிவினால் இழந்தது என இறந்த காலத்தாற் கூறினார். இது காலவழுவமைதி. அண்டர் - ஆயர்; முல்லை நிலத்து வாழ்வோர், இடையர், பொதுவர் எனவும் இவரைக் கூறுவர். அவர்கட்குரியது வேய்ங்குழல். இவர் பசுக்களை மேய்ப்பவர் அவற்றைக் கூட்டுவதற்குக் குழலிசை துணையாகும் என்று கருதிக் குழலூதுவர் எனத் தெரிகிறது. கண்ணன் குழலூதிய வரலாறு காண்க. துளையில் நஞ்சு : இது குறிப்பால் இசையை யுணர்த்தியது. காதல்நோ யுடையார்க்குக் குழலிசை நஞ்சுபோன்றது என்ற கருத்துத் தோன்ற அங்ஙனம் கூறினர். குமிழி - பெருக்கு. அந்நஞ்சு இனிவருநாளிற் பெருகித்தோன்றும் என்பது கருத்து. சோழனைப் "பஞ்சவனே" என்றழைத்தது பாண்டியநாட்டினையும் தன்னதாக்கிப் புரப்பவன் என்ற குறிப்பு. பஞ்சவன் ஐந்து நிலங்களையும் உடையவன் என்ற காரணத்தால் வந்தது. நீ பாண்டி நாட்டிற்கும் உரியவன் ஆதலால் அந் நாட்டுப் பொதிய மலையிலிருந்து வருந் தென்றலையும் வராமல் விலக்குவாய்; அது மிகவும் கொடியது என்றுரைக்கும் குறிப்பாகவும் நின்றது பஞ்சவனே என்பது. கூந்தலார் மொய்த்துக் கூடி எனக் கூட்டுக. முருகு - தேன், மணம் என்ற இருபொருள் தரும். வார் என்பது நீண்ட, ஒழுகும் என்ற இருபொருள் தரும். தேனொழுகும் கூந்தல் என்றாவது மணமுள்ள நீண்ட கூந்தல் என்றாவது கொள்க. கடலும் வேய்ங்குழலும் தென்றலும் காதல் கொண்டவர்க்குப் பகையாகும் என்பதை ‘முத்துங் களபமும் தண்பனி நீரு முயங்குமலர்த், தொத்துங் குளிரியும் தூமலர்ப் பாயலுஞ் சூழ்ந்து புறங், கத்துங் கடலுங் கதலியு மாலியும் கங்குலுமிப், பத்தும் பெரும்பகை யாய்விட்ட வாவொரு பைந்தொடிக்கே" எனவும், "தென்றற்கும் வீணைக்குஞ் சேமணிக்குங் கோகிலத்துக் கன்றிற் கமைக்காழிக் கம்புலிக்கு - நின்றரற்று, மன்னைக்கு மாரற் கயர்ந்தாளென் றன்னமே, என்னைக் குமாரர் கியம்பு" எனவும் வரும் இரத்தினச் சுருக்கநூற் கவிகளால் உணர்க. வாடை - வடகாற்று; கோடை - மேல்காற்று. தென்றல் - தென்காற்று, கொண்டல் - கீழ்காற்று இப் பெயர்கள் "கோடை வெயில் சுடச்சுடமெய் கொளுந்தியிறந் தனபோலக் கொண்டல் கோடை, வாடைசிறு தென்றலெனு மாருதங்கள்" என வில்லி பாரதத்தினும் வருதல் காண்க. பருகுவார்போல் பார்ப்பார் எனக் கூட்டுக. இது குறித்துப் பார்த்தல், உற்றுப் பார்த்தல், பார்த்தகண் வாங்காது பார்த்தல் என்பன போன்றது. பருகு வார்போலப் பார்த்தல், "பருகுவன்ன வருகா நோக்கமொடு" (பொருந. 77) எனவும், பருகுவனள் போல..............மதரரி நெடுங்கண் வேற்படை கான்ற (பெருங் 33. 121 - 3) எனவும், "இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணான் முகத்தழகு, பருக நோக்கி" (கம்ப. 1. குலமுறை 2) எனவும் பிறர் கூறுவதும் காண்க. |