பக்கம் எண் :

பக்கம் எண் :97

குலோத்துங்க சோழனுலா


 

217







225




230
சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர்
சேனா பராக மெனத்திகழப் - பூநாறும்
சுண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூய்
வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில்
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர்
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற்
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்குந்
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியுங் கொள்ளத் தரினென்பார் - மாதை
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற்்



 

வரிகள் 217 - 232 : அதனெதிர் .............இவனென்பார்

சொற்பொருள் : சோழன் செல்லும் படைகளின் தூசிக்கெதிராக எழுகின்ற மன்மதன் சேனைத் தூசியென விளங்கும்படி அம்மாதர் பூவின் மணங்கமழும் பொற்சுண்ணத்தை யெதிரே தூவித் தமது வளையலையும் அதனுடனே தூவித் தம் வடிவத்தின் நிறத்தையும் இழந்து மனத்தையும் இழந்து தமக்குள் ஒருவரையொருவர் நோக்கி இங்கு உலா வருபவன் மண்ணுலகத்தில் துன்பத்தை யழிக்கும் பகைவன்; இவனைப் பார் என்பாரும், இவன் விக்கிரம சோழனாகிய சக்கரவர்த்தி மகன் என்பாரும். முன் பழைமையான மேன்மையுடைய மன்னரெல்லாம் தலைவணங்கும் படி தோன்றிய விதுகுலநாயகியின் மைந்தன் என்பாரும், மகிழ்ச்சியாற் கண்ணிற்குப் பொருந்திய அழகுடைய தெய்வங்களாகிய திசைகாக்குந் தேவர் எண்மருங் கூடி ஒரு வடிவாக வந்தவன் இவன் என்பாரும், மண்ணுலகத்தார்க்கும் விண்ணுலகத்தார்க்கும் பாதலவுலகத்தார்க்கும் தெய்வத்தன்மையுடைய முனிவர்கட்கும் மற்றுமுள்ள யாவர்க்கும் இவனே காவலனாவான் என்பாரும், இனிமையான இவன் புனைந்திருக்கும் பூமாலையாகிய குருக்கத்தியும், செங்கழுநீரும், நந்தியாவட்டமும் ஆத்தியும் நாம் கொள்ளும்படி தருவானேல் அது நன்று என்பாரும், சீதையாகிய மாதினை வருத்திய மிதிலையில் இருந்த ஒப்பற்ற வில்லினை முற்காலத்தில் ஒடித்தவனே இவன் என்பாரும் ஆகி இனையர் பலர் நிகழ (245) என்பதனோடு கூட்டுக.

விளக்கம் : பூநாறும் சுண்ணம் என்றது மலரையும் பொற்பொடியுடன் கலந்து மேலெறிவது வழக்கம் என்பதைக் காட்டும். மகளிர் மகிழ்ச்சியால் சுண்ணந் தூவுவர் என்பது "தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து" (சீவக. 493) எனவும், "சுந்தரச் சுண்ணத் துகளோடு மளைஇ" (சிலப். 4. 42) எனவும், "பூவும் சுண்ணமும் புகழ்ந்தெதி ரெறிமின்" (கல்லாடம்) எனவும் பிறர் கூறியவற்றானுணரலாம். படைகளெழுந்து நடக்கும்போது மண்ணிலிருந்து தூசியெழுவது இயற்கை. மங்கையர் மன்மதன் சேனை யாதலால் இவர்களிடமிருந்தும் தூசியெழுந்தது; அது மட்பொடி, இது பொற்பொடி. பராகம் - தூள்; தூசி சேனாபராகம் - சேனையிலெழுந் தூசி. சேனையிலெழுந் தூசிபோலவே மகளிர் கூட்டத்தினின்றும் எழுந்தது தூசி என்க. அதனெதிர் திகழத் தூய எனக் கூட்டுக. தொடி - வளையல். தூஉய் - தூவி; இறைத்து. வளையலை யிவர்கள் தூவினாரலர்; வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்தன; ஆயினும் சுண்ணந் தூவும்போதே வளையல்களையும் தூவுவதுபோல இருந்தன அவர்கள் தோற்றம் எனக் கொள்க. வண்ணம் - நிறம்; மாமைநிறம். காதலால் மாறுபட்டது, மனமும் அவர்களிடமில்லாமல் சென்றது உலாத்தலைவன்பால் எனக் கொள்க. பொற்பொடியும் பூவும் தூவித் தலைவனைக் கண்டார் மகளிர், உடனே காதல்கொண்டார். உடல் மெலிந்தது; வளையல்கள் கழன்று வீழ்ந்தன; மாமைநிறம் விளர்த்தது. நெஞ்சும் அத்தலைவன்பாற் சென்றது. மயக்கத்தோடு நின்றார் என்க.


 

      நின்ற மங்கையரிற் சிலர் இன்னற்பகைவன் என்றார். அகளங்கன் மகன் என்றார். விதுகுலநாயகி சேய் என்றார், திசா தேவர் எண்மரும் காணும் இவன் என்றார், யாவர்க்குங் காவல் இவன் என்றார். தாதகியுங் கொள்ளத்தரின் (நன்று) என்றார். இறுக்கும் அவன் இவன் என்றார். இவ்வாறு அவன் பெருமையைப் பேசினர் எனக் கொள்க. "இன்னற்பகைவன்" என்றது பூமியில் வறுமை பிணி முதலியவற்றால் வருந்துவோரை அவ்வருத்தத்தை நீக்கிப் காப்பவன் என்ற பொருளையுணர்த்தியது. குலோத்துங்கசோழனுடைய தாயின் பெயர் விதுகுலநாயகி எனத் தெரிகிறது. விது - சந்திரன். மதிக்குலத்திற் றோன்றிய தலைவி என்பது பொருள். திசாதேவர் - திசையில் உள்ள தேவர். கண்மருவும் என்பது குறைந்து கண்மரும் என நின்றது. இது செய்யுள் விகாரம். திசைக்குரிய தேவர் எனப்பொருள் கொள்க. திசைக்குரிய தேவராவர் எண்மர் : இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்பன அவன் பெயர். திசை, கிழக்கு முதல் வலமாக முறையே எண்ணிக் கூட்டுக. இவர் எண்மருங் கூடி யொரு வடிவெடுத்து வந்தவன் இவன் என்பது கருத்து. திசைக்காவலர்போல இவனும் எட்டுத் திசையும் புரக்க வந்தவன் போலும். மாதவி - குருக்கத்தி மலர். வலம்புரி - நந்தியாவட்டம். தாதகி - ஆத்தி. இது சோழர்க்குரிய மாலை :- இதனுடன் மாதவி, செங்கழுநீர், வலம்புரியாகிய பூமாலையும் புனைந்திருந்தான் போலும். அதனால் அங்ஙனம் கூறினர் எனக்கொள்க. ‘தரின்' என்ற வினையெச்சத்திற்கு "நன்று" என்ற சொல் வருவிக்கப்பட்டது. ஒறுக்கும் - வருத்தும். இறுக்கும் - ஒடித்த. இறுக்கும் வில், மிதிலையொருவில் எனக் கூட்டுக. மாதையொறுக்கும் வில் என்றது, அவ்வில்லை வளைத்ததனால் இராமன் சீதையை மணந்தான். அவனை மணந்தபின் சீதை வனத்திற்குச் சென்றாள். இராவணன் தூக்கிக்கொண்டுபோய்ச் சிறை வைத்தான். பின்னர் வந்து தீயிற் குளித்தாள். தனியே காடு சென்றாள் இத் துன்பங்களை யெல்லாந்தந்தது அவ் வில்லே. அவ் வில்லுடன் பிறந்திலளெனில் இத் துன்பங்கள் அவளை யணுகா. அவளையொறுத்தது அவ் வில்லேயென்பது கருத்தாகும். இறுக்கமவனிவன் என்றது இராமனே இவன் என்று துணிந்து கூறினர் எனக்கொள்க.