| வரிகள் 208 - 217 : திரண்டு .............சமுகந்தெரிப்ப சொற்பொருள் : அம் மங்கையரிற் பலர் கூடிச்சென்று உலா வரும் தலைவனுக்கு நேர் நின்று புரள்கின்ற கரிய புருவமாகிய வலிய வில்லும், கண்களாகிய மலர்ப் பாணமும், பெரிய பூமியின் எல்லையைக் கவரவும், வண்டுகள் வரிசை வரிசையாகக் கூடி நீலமணிக்கூட்டம் ஒலிப்பதுபோல மொகு மொகுவென்று ஒலிப்பவும், மணம் வீசும் சுருளாகிய மேகம்போன்ற கூந்தல்களில் வண்டுகள் வாய்வைத்தூத அவை யூதுவது சின்னம் போலத் தோன்றவும், இன்பத்திற்கிடமாகிய மயிர்ச்சாந்து மணக்கும் கன்னங்களில் தாழ்ந்து தோளிற்படிந்த காதணிகள் மகரமீன் பிறழ்கினற் கொடியைப்போலத் தோன்றவும் அதனால் போர் புரியவரும் காமன் படைக்கூட்டம் என்பதை யாவர்க்கும் தெரிவிக்க. விளக்கம் : பலர் திரண்டு எதிரே சென்று (நின்று) அனங்கன் சேனா சமுகம் என்பதைத் தெரிப்ப எனக் கூட்டுக. காமனுக்குப் படை மங்கையர் என்று இலக்கியங் கூறுவதால் "அனங்கன் சேனாசமுகம்" மங்கையர் கூட்டம் என்றார். போர்வீரர்கள் வில்லும் அம்பும் வைத்திருப்பதுபோல ஆங்குவந்து நின்ற மாதரும் புருவமாகிய வில்லும் கண்ணாகிய அம்பும் வைத்திருந்தனர் எனவும், காமனுக்கு வண்டுகள் வில் நாண் எனக் கூறுவதால் "சுரும்பு நிரைக்கு நிரை முரல" எனவே அவனுடைய வில் நாணும் இருந்தது எனவும் கொள்க. சுருள் - கொண்டை. மேக + அளகங்கள் = மேகாளகங்கள் - மேகம் போன்ற கூந்தல். கூந்தலிற் சுருண்ட கொண்டை குயில்போன்றிருந்தது; அதில் வண்டு வாய்வைத் தூதுவது சின்னம் ஊதிக் காமன் வருகின்றான் என்று தெரிவிப்பதுபோல் இருந்தது எனவும், காதணியாகிய மகரக்குழைகள் தோளிற் றாழ்ந்து அசைவது, மகரக்கொடியைப் பிடித்திருப்பது போலத் தெரிந்தது எனவும் கொள்க. ஆங்கு நின்ற மங்கையர் கூட்டம் மன்மதன் படைக்கூட்டம் போலத் தெரிந்தது எனக் கொள்க. காகாளம் : நீட்டல் விகாரம். காகளம் - சின்னம்; ஊதுகொம்பு. கதுப்பில்தாழ், தோள் தாழ் குழை எனக் கூட்டுக. புருவத்தை வில்லாகவும் கண்ணை அம்பாகவும் கூறுவது இலக்கிய மரபு. ‘புருவச்சிலை குனித்துக் கண்ணம்பெனுள்ளம் உருவத்துரந்தாரொருவர்' (தண்டி. 36. மேற்) எனப் பிறர் கூறுவது காண்க. மொகு மொகுவென்ன : ஒலிக்குறிப்புக்காட்டும் இரட்டைக்கிளவி. மிஞிறு - வண்டு; ஞிமிறு என மாறியும் வரும். புவனம் எல்லை பிடிக்க என்றது, இவர்களிடத்துள்ள வில்லும் அம்பும் போர் புரிவதற்குப் பூமியினெல்லை முழுவதையும் பற்றிக்கொள்ள என்றதாம். எனவே மங்கையர் கண்கள் உலகத்தையெல்லாம் வெல்லும் என்பது கருத்து. "யானையிரதம் பரியா ளிவையில்லை, தானுமனங்கன் றனுக்கரும்பு - தேனார், மலரைந்தினால் வென் றடிப்படுத்தான் மாரன், உலகங்கண் மூன்று மொருங்கு" (தண்டி. 79. மேற்) என வருவதும் காண்க. காமனுக்குக் கரும்பு வில், மலர் அம்பு, வண்டு நாண், குயில் காளம், மீன் கொடி. "சுரும்பு நிரைக்குநிரை முரல" என்றது, அவன் விற்கயிறு முறுக்குவதுபோலத் தோன்ற என்ற குறிப்பைக் காட்டியது. கூந்தற்சுருளில் வண்டு வாய்வைத்தூதியது அவனுடைய குயிற்சின்னம் ஊதியதாகக் குறிப்புக்கொள்க. மகரக்குழையை அவன் மகரக்கொடியாகக் கொள்க. காமனுக்குரிய சின்னங்களை "ஆலைக் கரும்புசிலை யைங்கணைபூ நாண்சுரும்பு, மாலைக் கிளிபுரவி மாருதந்தேர் - வேலை, கடிமுரசங் கங்குல் களிறு குயில் காளங், கொடிமகரந் திங்கள் குடை" (இரத்தினச்சுருக்கம்) என்ற வெண்பாவால் அறிக. மங்கையர் காதணிகள் மன்மதன் மகரக்கொடிபோலத் தோன்றின என்பது "இளமயிலனைய சாய லேந்திழை குழைகொள் காது, வளமிகு வனப்பினாலும் தன்மையாலும், அளவில்சீ ரனங்கள் வெற்றிக் கொடி யிரண் டனைய வாக" (பெரிய, திருஞான. 1100) என்று கூறியதாலும், "ஓது, மகரக்கொடியின் மணிக்குழைகள் வாய்ப்ப" சொக்கநாத ருலா, 444 - 5) என்பதனாலும் அறியலாம். சோழன் முன்னேபோய்ப் பலமங்கையர் நின்றனர். அவர்கள் காமன் படை போலக் காணப்பட்டனர் என்க. |