| வரிகள் 200 - 207 : தம்முடைய .............மொய்ப்ப சொற்பொருள் : சோழன் மறுகில் வந்தவுடனே மங்கையரனைவரும் தம்முடைய பொது மண்டபந்தோறும் போய்க்கூடினர். சிலர் பலகணிகளைத் திறந்து அவ்விடத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். சிலர் மேலுள்ள நிலாமுற்றத்தின்மேற் கூடினர். சிலர் பூமாலை தொங்கவிடப்பட்ட திண்ணை முழுவதும் நெருங்கினர். சிலர் மாளிகையினுச்சியில் இடமில்லையென்று சுருக்கமாகத் தோன்றும்படி நெருங்கியிருப்பர். சிலர் மாளிகைமேலேறி நிற்பார். சிலர் மண்டபத்தில் வந்து நிறைவார். சிலர் மாடங்களின் உச்சிதோறும் ஏறியிருப்பார். சிலர் இவ்வாறே நீண்ட தெருவின் இருபுறத்தினும் மொய்த்திருக்கவும். விளக்கம் : சாலை - பெரிய பொதுமண்டபம். சாளரம் - சன்னல், சன்னல்களின் ஒவ்வொருபகுதியையும், ஒவ்வொருவர் கையாற் பற்றிக்கொள்வர்; அதன் வழியாகப் பார்ப்பதற்கு என்ற கருத்துத் தோன்ற "சாளரங்கள் கைக்கொள்வார்" என்றார். நிலாமுற்றம் என்பது மாளிகையின்மேல் நிலவொளி பாயும்படி மேல் ஒன்றும் வேயாது விட்டிருக்கும் இடம். இதனை வேயாமாடம் (சிலப். 5. வரி 7) என்பர் இளங்கோவடிகள். தெற்றி - திண்ணை. நெற்றி என்பது உச்சியையடுத்த பகுதியாம், நெற்றி போல மாளிகையின் உச்சியையடுத்துச் சிறிது நீண்டு வெளிப்புறமாக இருக்கும் இடமாம். இதனை இக்காலத்து எழுதகம் என்பர். அக்காலத்து நெற்றி என்பது வழக்கம்போலும். மண்டபம் என்பது யாரேனும் வருவார் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருப்பது; மனையின் உட்புறம் இருக்கும். வெளிப்புறமும் இருக்கும். மாடம் குளிகைதோறும் என மாற்றிக்கொள்க. மாடத்தின் உச்சிதோறும் என்பது பொருள். துறுவார் - நெருங்குவார். இரண்டுமருங்கு என்றது வீதியின் இருபுறத்தையும் உணர்த்திற்று. உலாப்பார்க்க வந்து மங்கையர் கூடினர் என்க. |