| வரிகள் 184 - 200 : அருவிபோல் .............மறுகணைந்தான் சொற்பொருள் : அருவிவீழ்வதுபோல வொழுக்கி மதத்தைச் சொரிகின்ற யானைகளில் எட்டுத்திசை யானைகளும் நீங்க மற்றை யானைகளெல்லாம் வந்து நெருங்கவும், சூரியன் தேரிற்கட்டி நிற்பனவாகிய ஏழு குதிரைகளும் நீங்கக் குதிரையினங்கள் முழுவதும் கூடிவரவும், இரு நிதியையும் உடைய தெய்வமாகிய குபேரன் வாகனம் ஒன்று நீங்க மற்றை மனிதர் இனங்கள் முழுவதும் வந்து கலந்து ஆரவாரஞ்செய்யவும், கூட்டத்தினிடையே யெழுந்து தூசிகள் மேலுலகினூடுருவ வேறியதாலும், தூவிய பொற்பொடிகள் அத் தூசிகளின் ஊடுருவிக் கீழே விழ்ந்துகிடப்பதாலும், யாவரும் வணங்கத்தக்க விண்ணுலகம் மண்ணுலகமாகி, மண்ணுலகம் பொன்னுலகமாகி மாறுபட்டுத் தோன்றவும், அளவிடப்படாத மாகதரும், மங்கலப்பாடகரும், பூவுலகத்தில் வந்த விஞ்சையர்களைப்போலத் தோன்றும்படி துதித்துப்பாடவும், வானோர், கொழுந்துடன் எழுந்த கற்பகச் சாதி மலர்களைக் குவித்துவைத்துச் சோழமன்னனை மற்றை மன்னர் வந்து வணங்கும்போதெல்லாம் அம் மலர்களை மழை போலச் சொரியவும், உயர்த்திய கையை மேகமென்று கூறும் படி ஏழைகளாக வந்திரந்தவர்க்குப் பொன்மழை பொழிந்து பூமியைத் தூர்த்தும், கருமேகம் படியும் மாடங்கள் நிறைந்த தெருவிற் சேர்ந்தான். விளக்கம் : அருவி மதத்திற்கு உவமை. திக்கு யானைகள் எட்டுமட்டுமே அங்கு வராது நின்றன. மற்றை யுலகத்திலுள்ள யானைகளெல்லாம் அங்கு வந்தன எனவும், சூரியன் தேரிற் பூட்டிய புரவி யேழும் வராமல் நின்றன மற்றைப் புரவிகளெல்லாம் அங்கு வந்தன எனவும், குபேரனுக்கு வாகனமாகிய நரன் ஒருவனே அங்கு வந்திலன். மற்றை மக்கள் யாவரும் வந்தனர் எனவும் கொள்க. இரவி - சூரியன். புரவி - குதிரை. போத - வர. "நரவெள்ளம் விரவி ஆர்ப்ப" எனக் கூட்டுக. நரவெள்ளம் - மக்கட்கூட்டம். கட்டிநிற்பன புரவி எனவும், நிதி உடைய கடவுள் எனவுங் கூட்டிப் பொருள் கொள்க. நிதி இருநிதியைக் குறித்தது, சங்கநிதி பதுமநிதி என்பன அவை. இவை குபேரனிடத் திருப்பன எனக் கூறும் நூல்கள். நரவாகனன் என்பது குபேரன் பெயர். நரன் என்ற பெயருடையவன் ஓர் இயக்கன் குபேரனைத் தாங்குவான் எனத் தெரிகின்றது. ஆசிரியர், உலாவரும் கூட்டத்தை இங்ஙனம் சிறப்பித்தனர். இது போலவே கம்பரும் "போரி யைந்தன தோற்றவென் றிகழ்தலிற் புறம்போய், நேரி யன்றவன் றிசைதொறு நின்றமா நிற்க, ஆரி யன்றனி யைங்கரக் களிறுமோ ராழிச், சூரி யன்றனித் தேருமே யிந்நகர்த் தொகாத" (ஊர்தேடு. 11) எனவும், "ஆழி, யண்டத்தி னருக்கன்ற னலங்குதேர்ப் புரவி, ஏழு மல்லன வீண்டுள குதிரையு மெல்லாம்" (ஊர்தேடு; 9) எனவும் கூறியிருப்பன காண்க. கூட்டம் நடந்து செல்வதால் எழுந்த மண்தூசி மேலுலகஞ் சென்று படிந்ததால் பொன்னுலகு மண்ணுலகாக மாறியது. பொற்சுண்ணங்களையும் மலர்களையும், ஆங்கு வருவோர் மகிழ்ச்சிக்கறிகுறியாகத் தூவுவது இயற்கை யாதலால் அவ்வாறு தூவிய பொற்பொடிகள் நிலத்தில் வீழ்ந்து மண்ணை மறைத்துப் பொன்னிறமாகவே தோன்றுவதால் மண்ணுலகு பொன்னுலகாக மாறியது என்க. மண்புழுதி காற்றால் மேலேறுவதும் பொன்பொடி கீழே யிறங்குவதும் இயல்பாதலால் "துகளுருவ வேறியும்", "துகளுருவ வீழ்ந்தும்" என்றார். இறங்குதற்கும் ஏறுதற்கும் அப் பொருளின் கனமும் கனமின்மையும் காரணமாம். மண்ணின் பொடியும் பொன்னில் பொடியும் ஒன்றுளொன் றூடுருவிச் சென்றது என்பது தோன்ற "உருவவேறியும்", "உருவ வீழ்ந்தும்" என்றார் மாகதர், இருந்து துதிப்பார், பாடகர் - இசைபாடுவோர். மாகதரும் பாடகரும் துதிப்பதும் பாடுவதும் விஞ்சையர் வந்து புகழ்வதும் பாடுவதும்போலத் தோன்ற என்பது கருத்து. பூகதர் - பூமியில் வந்தவர். பூமியில் வந்த விஞ்சையர் போல மாகதரும் பாடகரும் தோன்றினர். அவர்கள் துதியும் பாடலும் அத்துணைச் சிறப்பாயமைந்திருந்தன வெனக்கொளக். நாகர் - தேவர், நாகம் - விண், அதில் வாழ்வார் நாகர் எனப்பட்டார். தேவர்கள் உலாக்காண மேல்வந்து நின்றனர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. "தேவர் வருவர் எனத் தெளிய" என்பது காண்க. அங்ஙனம் வந்துநின்ற தேவர்கள் கற்பகச்சாதி மலர்களைக் குவித்துத் தம்பக்கம் வைத்துக் கொண்டு உலாவரும் தலைவனை வணங்கியெழு மன்னர்மேல் அம் மலர்களைச் சொரிந்தனர் என்க. மன்னர் தொழுந்தொறும் நகர் சொரிய என்று கூட்டுக. எழுந்துள கை : கொடை வழங்குவதற்காக மேலே உயர்த்திய கை. இது சோழனுடைய கை. மழையென்ன - கண்டோர் மேகமெனச் சொல்லும்படி. கனகப்பெயல் - பொன்மழையை. தூர்த்து - பெய்து நிலத்தை மறைத்து. ஏழைகள் எடுத்துக்கொள்ளுமாறு பொன்னை மழைபோலச் சொரிய அப் பொன் நிலத்தில் நிறையக்கிடந்தது எடுப்பாரின்றி என்பது கருத்து. பொன்னை வாரி யிறைத்துக்கொண்டே சென்றான் சோழன் என்பது குறிப்பாற்றோன்றியது. |