பக்கம் எண் :

பக்கம் எண் :93

குலோத்துங்க சோழனுலா
 


 

172







180
 
எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து
விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப்
பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின்
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச்
சிலையான் வரவு தெரியத் - தொலையாது
வீசுந் திவலை விசும்புகூர் மங்குலால்
வாசவன் வந்த வரவறியக் - கூசாதே
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
தேவர் வருவ ரெனத்தெளிய - யாவர்க்கும்
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத்
தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப்
பரவி யுலகிற் பலமண்ட லீகர்
புரவி மிசைகொண்டு போத - அருவிபோல்



 

வரிகள் 172 - 184 : கொங்கத்து .............கொண்டுபோத

சொற்பொருள் : மலைநாட்டுக்குரிய வில்லெழுதிய துகிற் கொடியும் மீன் எழுதிய துகிற்கொடியும் புலியெழுதிய துகிற்கொடி யொன்றின் அருகே செல்லவும், தென்றிசையிலிருந்து தென்றற் காற்றுவர அதனால் நீண்ட கரும்பு வில்லைப் பிடித்த மன்மதனும் வருகிறான் என்று தெரியவும், நீங்காமல் வீசும் துளிகளையுடைய மேகங்கள் வானத்தில் நிறைந்திருப்பதால் இந்திரன் வந்த வரவை எல்லாரும் அறியவும், கூசாமல் இந்திரன் வந்ததால் தேவரில் யாவர் வாராமல் இருப்பார், தேவரெல்லாரும் வருவர் எனத் தெளியவும், வந்தவர் எல்லாருக்கும் பின்னர் வரும் முழங்கும் பெரிய யானையையுடைய பாண்டியன் முதலான மன்னர்கள் வணங்கி வரவும், சோழனுக்கு முன்னே வந்து வணங்கிப் பல மண்டிலங்களை யாளும் மன்னர் குதிரை மேல் ஏறிச் செல்லவும்.


 

விளக்கம் : கொங்கம் - மலைநாடு. அது சேரர்க்குரியதாதலின் "கொங்கத் துகிற்கொடி" என்றார். கொடுவரி - புலி; வளைந்த வரிகளையுடையது எனக் காரணப் பெயராம், சோழர்க்குரியது புலிக்கொடியாதலால் அது முன்னர்ச் செல்ல அதன் பக்கத்து விற்கொடியும் மீன்கொடியும் சென்றன என்க. சோழன் உலா வரும்போது மாதர் வந்து கண்டு காதல் கொண்டு மயங்குமாறு போர்புரிவதுகருதி மன்மதனும் அங்கு வந்தனன். அவன் உருவமில்லாதவன் ஆதலால் அவன் வருகின்றான் என்பதைத் தென்றற்காற்று வந்துணர்த்திற்று என்றார். தென்றல் காமனுக்குத் தேர்; அதனால் தேர் வந்ததால் அதிலேறி யவனும் வந்திருப்பன் என்று யாவரும் அறிவர் என்பது கருத்து. மலையம் + அநிலம் - மலையாநிலம் - தென்றல். மலையம் - பொதியமலை. அநிலம் - காற்று. பொதிய மலையிலிருந்து வருங்காற்று என்பது திரண்டபொருள். திவலை - துளி. விசும்புகூர் மங்குலால் வானத்தில் கூடிய மேகங்களால் இந்திரன் வந்தான் என்பதை எவரும் அறிவர். மேகம் இந்திரனுக்கு வாகனம் ஆதலால் அதன்மேல் ஏறி இந்திரனும் வந்திருப்பன் என அறியலாம். மனிதர் கண்ணுக்கு இந்திரன் வடிவந் தோன்றாமையால் குறிப்பாக அறிந்தனர் என்க. வாசவன் - இந்திரன், இவன் : இந்திரனைச் சுட்டியது இவன் வரவே யாவர் ஒழிவார் மற்றுள்ள தேவர் கூசாதே வருவர் எனக் கூட்டிப் பொருள் கொள்க. இந்திரன் வந்தமையால் எல்லாத் தேவரும் வந்திருப்பர் என்று மனத்துணிவு கொள்க. தென்னர் முதலானோர் என்பது, பாண்டியன் சேரன் போன்ற ஒத்த மன்னரை யுணர்த்தும். மண்டலீகர் - மண்டலங்களை யாளும் வேந்தர். தொண்டை மண்டலம் கொங்குமண்டலம் போன்றன மண்டலங்கள். சிறப்புடைய மன்னர்களிற் சிலர் புரவி மேலேறி உலாவரும் தலைவனுக்கு முன்செல்வதும் வழக்கம் போலும்.