| வரிகள் 164 - 172 : திருத்தக்க் .............இருள்களைய சொற்பொருள் : சிறப்பாகத் தக்க பள்ளித் திருத்தொங்கல் என்ற பூஞ்சோலையானது பகலோனையும் விலகும்படி செய்யத்தக்க ஒளிவீசவும் வெள்ளியாற் செய்த குடைகள் மேலே கவித்து வரவும், ஒளிபொருந்திய ஒற்றை வலம்புரிச் சங்கு முதலில் ஊதவும் அதன்பின் மற்றுமுள்ள எண்ணிறந்த சங்குகள் முழங்கவும், திரட்சியான வெண்சாமரை வீசவும், தெய்வம் பொருந்திய முரசங்கள் முழங்கு முழக்கம் நிறைநிலாக் காலத்திற் கடலானது முழங்கியதுபோலத் தோன்றவும், ஒளிரும் வாள், சங்கு, சக்கரம், சார்ங்கம் என்ற வில், கதை ஆகிய ஐந்து படையும் எங்கும் ஒளிவிட்டு இருளினை நீக்கவும். விளக்கம் : பள்ளித் திருத்தொங்கல் என்பது குடை, கொடி, விருது முதலியவற்றுடன், முன்செல்லும் தோரணம் மாலை இவற்றைக் குறிக்கும் எனத் தெரிகிறது. பழையவுரை, பள்ளிக் திருத்தொங்கல் - சேறாடிவகை என்று கூறுகிறது. பள்ளித் தொங்கல் - பொன்னாலாகிய கழுத்தணிவகை என்பது அகராதி தொங்கற்சோலை என்று கூறுவதால் இது தொங்கவிடப்பட்ட பலவகைத் தோரணங்களைக் கூறுவதுதான் பொருத்தம். ஆய்ந்துணர்க. பகல் விலக்க என்பது இதுவே பகல்போல இருளை விலக்குகிறது. பகல் வரவே வேண்டா என்று விலக்குவதுபோல விளங்க என்க. முதலில் ஒரு வலம்புரிச்சங்கு ஊதுவதும் அதன்பின் இடம்புரி வலம்புரி முதலிய எல்லாச் சங்குகளும் முழங்குவதும் அரசனுலாவிற்குப் புறப்படும்போது நிகழும் வழக்கம் எனத் தெரிகிறது. கலிப்ப - ஒலிப்ப. இரட்ட - மாறி மாறியசைய. முரசு ஆர்த்து உவா உவரி ஆடி ஒப்ப எனக் கூட்டி, முரசுகள் முழங்க, அது நிறைநிலா நாளில் கடலெழுந்து பொங்கி யசைவதை யொப்ப ஒலிதோன்ற எனப் பொருள் கொள்க. அவிர் - விளங்குகின்ற. சார்ங்கம் - திருமால் கைவில். வாள் முதலிய ஐந்து படைகளும் திருமாலுக்குரியவை. திருமாலைப் போன்றவன் அரசனெனக் கொண்டு அவன் மருங்கில் ஐந்து ஆயுதங்களையும் எடுத்து வந்தனர் எனக் கொள்க. |