பக்கம் எண் :

பக்கம் எண் :91

குலோத்துங்க சோழனுலா
 


 

154





160


 
போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில்
மாக்காதல் யாதவனும் மாறழித்த மீனவனும்
வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட்
கெட்டாத வச்சிரமு மெல்லா வுருமேறும்
வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய்
அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
உபய வயக்கோட் டுருமை - விபவ
நிருத்தந் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற்
றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க



 

வரிகள் 154 - 164 : புறநின்ற் .............திருக்கவினவேறி

சொற்பொருள் : அரண்மனைப் புறத்தே நின்ற போர்க்குரிய பட்டத்து யானையை, அரசர்க்குட் சிறந்தவனாகிய திருமகளாற் காதலிக்கப்பட்ட கண்ணனும் பகைவரைத் தொலைத்த பாண்டியனும் பிடித்துக் கட்டாமல் எங்குந் திரிகின்ற உண்மையான மேகங்களுக்கும், விண்ணுக்கு வேந்தனாகிய இந்திரனுக்கு எட்டாத (அருமையான) வச்சிரப்படையாலும் இடியேற்றாலும் வெட்டப்படாமல் எங்கும் இருக்கின்ற மலைகட்கும், குறையாத பழைமையான இடத்தையுடைய வடவைத்தீயாலும் பன்னிரண்டு சூரியர்களாலும் பற்றப்படாமல் உள்ள எல்லாக் கடல்களுக்கும் பொதுவான அபயங்கொடுக்கும் அயிராபதம் என்ற பெயருடைய யானையை, இரண்டு வலிய கொம்புடைய இடியேறு போன்ற யானையை, பகைவர் செல்வங்களை யெல்லாம் தன் ஆட்டத்தினால் தருகின்ற ஒரு பொன்மலை போன்ற யானையைக் கண்ணாற் பார்த்து அதன் பிடரில் அழகு பொருந்த வேறியமர்ந்து.

விளக்கம் : "புறம் நின்ற" எனவே யானை நிற்கும் இடத்துக்கு அரசன் முன்னரே வந்து நின்றான் என்பது குறிப்பால் தோன்றியது. போர்க்களிறு - போருக்குத் தகுதியாய களிறு என்றாவது, போரைப் புரியும் களிறு என்றாவது விரித்துக் கொள்க. அயிராபதத்தை (161) உருமை (162) நிதிப் பொருப்பை (163) போர்க்களிற்றை (154) இவை நான்கும் பட்டத்து யானையை என ஒரு பொருளையே குறித்தன. அயிரா பதம் என்ற பெயருடையதும், இடியைப்போன்றதும், நிதிப் பொருப்பைப் போன்றதும் ஆகிய போர்க்களிற்றை எனப் பொருள் கொள்க. முகிற்கும் (156) வெற்பினுக்கும் (158) கடற்கும் (160) அபயங்கொடுக்கும் அயிராபதம் எனக் கூட்டுக. அபயங்கொடுத்தல்:இனி யஞ்சாதிருங்கள், யான் காத்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அச்சத்தைத் தவிர்த்தல். மேகங்கள் கண்ணனாலும் உக்கிர குமாரபாண்டியனாலும் கட்டப்பட்டுக்கிடந்து அஞ்சி மீண்டும் வந்தவை. கண்ணன் மேகங்களைக் கட்டுப்படுத்தி யஞ்சுமாறு செய்தான் என்பது கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்து மழையைத் தடுத்து வரலாற்றைக் குறிக்கும். மேகங்கள் மழை பெய்து சலித்து ஒன்றுஞ் செய்ய வியலாது வறிதே வானத்திற் கிடந்தது கட்டுப்பட்ட செயலேயாம் என்பது கருத்து. மேகங்கள் கண்ணனுக்கு அஞ்சித் தோற்று நின்ற வரலாறு பாகவதத்திற் காண்க. பாண்டியன் மேகங்களை விலங்கிட்டுச் சிறையடைத்தான் என்ற செய்தி "இடியுடைப் பெருமழை யெய்தா தேகப், பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப, மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத், தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி" (சிலப். 11 ; 27 - 30) என்பதும், திருவிளையாடற் புராணம் இந்திரன் முடிமேல்..........படலம் 41 ஆம் பாடல் "பொன்றத்து மருவிக் குன்றிற் புட்கலா வர்த்த மாதி, மின்றத்து திண்டோட் கொற்றவ னவற்றைப்பற்றிக் கன்றத்திண் களிறுபோலக் கடுந்தளை சிக்கயாத்தான்" என்பதும் எடுத்துக் காட்டும். மேகங்களை விலக்கிட்டுச் சிறையடைத்தவன் பின்னர் இந்திரன் வேண்டுகோள் உணர்ந்து சிறை விடுத்தான் என்பது வரலாறு. மலையைச் சிறகரிந்தான் இந்திரன் என்பது "மலைச் சிறகரிந்த வச்சிரவேந்தர்க்கு" (சிலப். 14 : 94) எனவும், ‘கூசின னஞ்சிப் போனான் குன்றிற் கரிந்த வீரன்' (திருவிளையாடற். மேருவைச். 53) எனவும் பிறர் கூறியவற்றால் விளங்கும்.
இடி, மலையையும் வெட்டித் துளைக்கும் என்பது "மந்திரன்னூஉ வரையுதிர்க்கும், நரையுருமின் னேறனையை" (மதுரைக். 62, 63) என்பது போல வருஞ் செய்யுட்களால் உணரலாம். வடவை - பெண் குதிரை; இதன் முகம்போலத் தோன்றலின் இது வடவா முகாக்கினி என்று வடமொழியிற் பெயர் பெற்றது. இது கடலின் நடுவே அடியில் இருப்பது; கடல் மேலெழுந்து போங்கி யுலகத்தை யழிக்காதவாறு காத்து நிற்பது எனக் கூறுவர். முந்நான்கு - பன்னிரண்டு. கோள் என்பது குறிப்பாற் சூரியரை யுணர்த்தியது. கதுவாமல் - பற்றப் படாமல். மேகங்களே! நீங்கள் அஞ்சாதீர்! இனி என் முழக்கத்தைக் கேட்டால் கண்ணனும் பாண்டியனும் உங்களைப் பற்றுவதற்கு அஞ்சுவார்கள் என்றும், மலைகளே! நீங்கள் அஞ்சாதீர்! என் முழக்கத்தைக் கேட்டால் இந்திரன் வச்சிரப்படையால் உங்களை வெட்ட வாரான்; இடியும் உங்களை யிடித்துத் துளைக்கவராது என்றும், கடலே! நீ அஞ்சாதே, என் முழக்கத்தைக் கேட்டால் உன்னை வடவைத் தீயும்பற்றி வற்றுவிக்காது; பன்னிரு சூரியரும் பற்றி வற்றுமாறு செய்யார் என்றும் கூறுவதுபோல முழங்கியச்சத்தை நீக்கும். இதுவே "அபயங்கொடுக்கும்" என்ற தொடரின் கருத்தாகும். பட்டத்துயானையைக் கண்டவர் அதனையொத்த மற்றைப் பொருள்களையும் அழிக்க வஞ்சுவர் என்று கொள்க. உபயம் - இரண்டு. வயம் - வெற்றி, வலிமை. கோடு - கொம்பு. உரும் - இடி. ஐ : இரண்டனுருபு. உருமை : இடியை எனக் கொள்க.

      விபவம் - செல்வம். நிருத்தம் - ஆடல், விபவத்தை நிருத்தத்தால் தருகின்ற என வேற்றுமையுருபு விரிக்க. நிதிப்பொருப்பு - பொன்மலை. பொன்மலை போன்றது யானை. இது தன்னாட்டத்தால் பகைவரைப் போரிற் கொன்று அவர்கள் செல்வத்தையெல்லாம் தன் மன்னனுக்குக் கொடுக்கும் வன்மையுடையது என விளக்கம் காண்க. அரசன் ஏறியமர்ந்தவுடன் அழகு பெற்றது அவ்வியானையின் எருத்தம் என்பது தோன்ற "எருத்தம் திருக்கவின ஏறி", என்றார். வரி 164 முதல் 200 வரை உலா வருஞ் சிறப்புக் கூறுகின்றார் என்றுணர்க.