| வரிகள் 146 - 154 : முயங்கிய் .............ஏத்தெடுப்பப்போந்து சொற்பொருள் : அழகு பொருந்திய நெற்றியிலுள்ள திருநீற்றுக் கீற்றுகள் நோக்கிய மங்கையர் மனத்தைக் கவர்ந்து அவரை வருத்தவும், மெல்லிய புழுகும், கத்தூரிக்குழம்பும், மணத்துடன் கூடிய அகிற் புகையும் ஆகிய இவற்றின் மணம் எல்லாத் திசைகளையும் அளப்பவும், இனிமையான தோளிற் புனைந்த பூமாலையில் உள்ள செங்கழுநீர் மலர்கள், சுற்றுகின்ற கோள்களாகிய விண் மீன்களின் வரிசை போலத் தோன்றிக் கண்ணுக்குக் குளிர்ச்சி தரவும், அன்றலர்ந்த புதிய பூமாலைகளை யணிந்த மன்னர்கள் வந்து வணங்கித் துதிக்கவும் மறையோர் வந்து வாழ்த்தவும், அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து நின்று. விளக்கம் : செவ்வி - அழகு. முயங்கிய - பொருந்திய. செவ்வி முயங்கிய எனக் கூட்டுக. புண்டரம் - வரி, கீற்று; திருநீறு மூன்று வரிகளாகப் பூசும் வழக்கம் உண்மையை இது புலப்படுத்தும். அரசனும் அவ்வாறு பூசினன் எனக் கொள்க. மன்னனைக் கண்ட மகளிர் காதல் கொள்வதற்கு இதுவும் ஒரு கருவியாயிற்று. திருநீறு, கண்டவர் மனத்திலுள்ள மயக்கைப் போக்கும். இது மயக்கத்தை உண்டாக்கியது மன்னன் நெற்றியிற் சார்ந்ததனால், ஒரு முனிவர் நெற்றியைச் சார்ந்தாலன்றோ மயக்கத்தைப் போக்கும் சேரும் இடத்தாற் குணம் வேறுபடும் என்பது தெரிக. "இனத்தியல்பா மறிவென்ப துண்மையே, மனத்துயர் செயுமயன் மாற்று நீறுதான், அனிச்சமெல் லடியினார் நுதலடுத்தலும் பனித்துடல் வெதும்புமால் படுத்தலா லென்பார்" (பிரபு, மாயை பூசை, 34) எனப் பிறர் கூறியதும் காண்க. மங்கையர் பலரும் நெற்றியில் நீறுபூசியது ஆடவர் பலர்க்கும் மயக்கத்தை விளைத்தது என்பது இதன் கருத்து. அகண்டம் என்பது ஆகண்டம் என நீண்டது; நீட்டல் விகாரம். அகண்டம் - எல்லாம். இஃது எல்லாவுலகங்களையும் உணர்த்தியது. அல்லது எல்லாத் திசைகளையும் உணர்த்தியது எனக் கொள்க. அளப்ப என்பது கலப்ப என்றும் அளந்து பார்க்க என்றும் பொருள் தரும். காற்றோடு இப் பொருளின் மணங்கள் கலந்து எங்குஞ் செல்ல என்க. பூமாலையில் செங்கழுநீர்ப் பூக்கள் விண்மீன்கள் போலத் தோன்றின. அவற்றை நோக்குவார் கண்கள் குளிர்ச்சியடைந்தன என்பது கருத்து. கோள் + மாலை - விண் மீன்களின் வரிசை. குலோத்துங்கன் அணியணிந்து வெளியில் வந்து நின்றான் என்க. |