பக்கம் எண் :

பக்கம் எண் :89

குலோத்துங்க சோழனுலா
 


 







140




 
திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற்
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிய - பாற்கடல்
வந்த வனச மகளேபோன் மற்றது
தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச்
சுரகனகத் தோள்வலையஞ் சூட்டுக் கவித்த
உரக பணாமணி யொப்ப - விரவி
மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச்
சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில்
முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில்
வடிவு நிலவு மலையப் - படியில்
வயங்கு கடக மகுடாதி மின்னத்
தயங்கு பெரும்போதி சாத்தி - முயங்கிய



 

வரிகள் 134 - 146 : திருமார்பிற்் .............போதிசாத்தி

சொற்பொருள் : சிறந்த மார்பிற் கருங்கடல் மேற் பாற்கடல் மூடியிருப்பது போலத் தோன்ற ஒளிவீசும் முத்து மாலைகளைப் பரப்பியும், பாற்கடலிற் பிறந்த திருமகள் மார்பிலிருப்பதுபோல அப் பாற் கடல்தந்த தெய்வத் தன்மைவாய்ந்த மணி (கௌஸ்துப மணி) யும் விளங்கவும், கட்டிய சுரகனகம் என்ற பொன்னாற் செய்யப்பட்ட தோள் வலையம் என்ற அணி உச்சியில் வளைந்த பாம்பின் படமும் மணியும்போலத் தோன்றவும், கலந்து மகர வடிவமாகச் செய்த காதணிகள் இரு தோள்களின்மேற் கிடந்தசைவன மேருமலையுச்சியிற்றோன்றும் இரண்டு சூரியர்களைப்போல இலங்கவும், ஒப்பற்ற கிரீடத்திற் பதித்துள்ள மணிகளின் ஒளியாகிய வெயிலும் முடிமேற்கவித்துள்ள முத்துமாலை தொங்கும் வெண்குடையின் நிலவும் ஒன்றற்கொன்று மாறுபட்டுத் தோன்றவும், உவமையின்றி விளங்கும் கடக மகுட முதலியவற்றோடு சார்ந்து விளங்கும்படி பெரிய அரசிலைவடிவாயமைந்த பொன் மாலையையும் புனைந்து.

விளக்கம் : குலோத்துங்கள் மார்பு கருங் கடலாகவும், அம் மார்பின்மேல் முத்துமாலை பரந்து கிடப்பவை பாற்கடலாகவும் கொள்க. "கார்க்கடன் மீதே" என்ற குறிப்பும் குலோத்துங்கன் கருநிறமுடையவன் என்பதைக் காட்டியது. திருமால் என்று அரசரைக் கூறுவது மரபு. ஆதலால் திருமால் மார்பில் திருமகளும் கவுத்துவமணியும் தங்கியதுபோல் இவன் மார்பினும், திருவும் மணியும் தங்கித் தயங்கின எனக் கொள்க. பந்தம் - கால்மூட்டு; ஒன்றோடொன்றைப் பொருத்தியிருப்பது. பந்தத் தோள்வலையம் எனவும் சுரகனகத் தோள்வலையம் எனவும் தனித்தனி கூட்டுக. கனகம் - பொன். சுரகனகம் என்பது சிறந்த பொன்னிற்குப் பெயராக அக் காலத்து வழங்கியது போலும். தோள் வலையம் வளைந்திருப்பது, பாம்பு வளைந்து சுற்றியிருப்பது போலவும், பொருத்துவாய் அகலமாகவும் அதனிடத்து மணிபதித்தும் இருப்பது, எடுத்த படமும் மணியும் போலவும் தோன்றியது என்க. இரு தோள்களையும் மேருமலையின் இரு சிகரங்களாவும் இரு மகரக்குழைகளையும் அதன்மேல் எழுந்து ஒளி செய்யும் இரு சுடர்களாகவும் கொள்க; சுடர் - சூரியன். இரு சுடர் என வருவித்துக் கொள்க.

     முடிகளின் மாணிக்கம் பதிப்பது சிறந்ததாதலால் முடியின் மணி என்றது மாணிக்கத்தை, அதன் ஒளி செந்நிறம் அதனால் சூரியனுக்கு ஒப்பாய ஒளி அதுவே. முத்துக்குடையின் நிழல் வெண்மை ஒளிபரப்புவதால் நிலவென்பது பொருந்தும். படி - ஒப்பு. இல் - இல்லாத. போதி - அரசமரம், இஃது அரசிலை வடிவமான ஓர் அணிகலனை யுணர்த்தியது. போதி என்பது இன்ன அணி என்று நாம் காண்பதற்கு வழியின்று. அக்காலத்துப் பயின்றது போலும். அரசிலை வடிவமாக அமைந்த பொற்சங்கிலி என்று கொள்ளலாம். நீராடிக் கடவுளை வணங்கிப் பல தானம் வழங்கிப் பின்னர் வந்து உடையுடுத்துக் கச்சை கட்டி முத்துமாலை முதலியன அணிகலன் புனைந்து கடக மகுடம் முதலியவை விளங்கப் போதிசாத்தி என்று சுருங்கக் கொள்க.