பக்கம் எண் :

பக்கம் எண் :88

குலோத்துங்க சோழனுலா
 


 

122







130
 
உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில்
அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென
மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத்
தான மனைத்துந் தகைபெறுத்தி - வானிற்
கிளைக்குஞ் சுடரிந்த்ர நீலக் கிரியை
வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும்
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத்
திருவிடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப்
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத்
திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற்



 

வரிகள் 122 - 134 : தடமுகில்்் .............பந்தனம் சேர்த்தி

சொற்பொருள் : பெருமேகம் கருமலையில் மழை பொழிவது போல நீராடித் தம் குலதெய்வமாகிய சிவந்த சடையுடைய தேவன் (சிவ பெருமான்) பொன்னடியை நினைந்து வணங்கி ஆங்குவந்த அந்தணர்க்கு வேண்டுங் கொடையெல்லாம் நற்பண்புடன் கொடுத்து, வானத்திற்--பிரிந்து தோன்றும் ஒளியுடைய இந்திர நீலமலையை வளைத்த இளநிலாவைப்போல வுடுத்திருந்த வடிவத்திலுள்ள உடையைக் களைந்து மற்றொரு சிறப்புடைய வெள்ளையாடையையுடுத்து, ஒரு பக்கத்தே தோலுறையுடன் உடைவாள் செருகியிருக்கப்பட்டதாகிய ஒப்பற்ற பசும்பொன்னாற்செய்த கச்சையை ஒன்பது மணிகளும் பதித்துள்ள ஒளி வீச அவற்றுள் வயிரம் பன்னிரண்டு சூரியர்களும் அஞ்சவும் தோற்கவும் ஒளி வீசும்படி சிறந்த உதரபந்தனமாக இறுகக்கட்டி.

விளக்கம் : அஞ்சனசைலம் - கரியமலை. அபிடேகம் - முடியிலிருந்து நீர் முதலிய பொருள்களை வழிய விடுதல். மஞ்சனம் ஆடி - நீராடி. குலோத்துங்கசோழன் காமனைப் போற்கரிய நிறமுடையான் என்பதனை "அஞ்சனசைலத்......செய்வதென" என்பதும்"இந்திரநீலக் கிரியைவளைக்கும்" என்பதும் விளக்கின. "வழிமுதல்" என்பதும் தங்குலத்திற்கு முதல்வன் என்ற பொருளைத் தந்தது. "செஞ்சடைவானவன்" சிவனையே யுணர்த்தும்; சடையுடைய தெய்வம் பிற இன்மையால். சோழமன்னர் வழித் தோன்றியவர் யாவரும் சிவனையே குலதெய்வமாகக் கொண்டவர் என்பது யாவரும் அறிந்ததே. தானம் - கொடை; தானம் அனைத்தும் என்றது அன்னம், ஆடை, பொன் பசு, பூமி முதலியவற்றை. அன்னதானம், வஸ்திரதானம் சொர்ணதானம், கோதானம், பூதானம் என முறையே கூறுவர் வடமொழிப்புலவர். பொறுத்தி பெறுவித்து எனப் பிறவினையாகக் கொள்க. தகை - பண்பு. ஆல் என மூன்றனுருபு கூட்டி, தகையாற் பெறுவித்து என்க. முன்னும் வெள்ளையுடை யுடுத்திருந்தான் சோழன் என்பதும் நீராடிய பின்னும் வெள்ளையுடையே யுடுத்தான் என்பதும் "இளநிலா" மான என்ற குறிப்பினால் தோன்றியது. உதர பந்தனம் - வயிற்றுக்கட்டு என்று பொருள்படும்; உடை கழலாமல் இறுக்கி வயிற்றின்கட் கட்டுங் கச்சையை யுணர்த்தும், அக் கச்சையின் ஒரு புறம் உடை வாள் தோலுறையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த தென்பதும் அது பொன்னாற் செய்யப்பட்டது, நவமணிகள் பதிக்கப்பட்டது, வயிரம் மிகுதியாகப் பதிக்கப்பட்டது என்பதும் தோன்றியது. எல்லா இரவிகள் என்றது பன்னிரண்டு சூரியர்களையும் குறித்தது. ஒவ்வொரு திங்களிலும் ஒவ்வொரு சூரியன் தோன்றுவன் என்பது இலக்கிய மரபு.