பக்கம் எண் :

பக்கம் எண் :87

குலோத்துங்க சோழனுலா
 


 

117


120
 
பொங்கார் கலிசூழ் புவனம் பதினாலும்
கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள்
புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம்
பவனி யெழுச்சி பணித்துக் - கவினும்
மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில்்



 

வரிகள் 117 - 122 : பொங்கார்கலி்்் .............பள்ளியுணர்ந்து

சொற்பொருள் : பெருகிய கடல் சூழ்ந்த உலகம் பதினான்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில் வந்த தன்னைக் கண்டு மகிழும் படியாகக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து தாம் இழந்த நாட்டை மீண்டும் பெறக் கருதிவந்த வேற்று நாட்டசரர்க்கெல்லாம் "இன்ன நாளில் நான் உலா வருவேன் அந் நாளில் யாவரும் இங்கு வரவேண்டும்" என்று கட்டளையிட்டுப் பின்னர் அழகிய மயில்போலத் தன்னுடன் முடிசூடிய தியாகவல்லி புவனமுழுதுடையாள் என்ற தேவியுடன் கூடித்துயின்ற துயில் நீங்கியெழுந்தது.

விளக்கம் : புவனம் பதினாலும் என்றது, இவனைத் திருமாலாகக் கருதியது; மேல் ஏழ் உலகும் கீழ் ஏழ் உலகும் ஆகிய பதினான்கையுணர்த்தும். புவனம் என்பது புவனத்திலுள்ளாரைக் குறித்தது; இடவாகு பெயர். எழு கடல் சூழ்ந்த நாட்டினையும் ஏழு தீவுகளையும் குறித்தது எனினும் பொருந்தும். பூபாலர் - மன்னர். புவனி பெறவந்த என்ற குறிப்பினால் இவர்கள் முன்னரே குலோத்துங்கனோடு பொருது தம் நாட்டினை யிழந்த மன்னர் என்று கொள்க. அவ்வாறு அரசர்க்கும் அவரவர் நாட்டினையளித்துத் தான் பவனிவரும் நாளினையும் குறித்துக் கூறிவிடுத்தான். மயில் ஒக்க என்றது தேவியழகினைச் சிறப்பித்தது, மற்றும் எத்தனையோ மனைவியர் இருப்பினும் அம் மனைவியருடன் புணர்ந்தின்பம் நுகர்வதேயன்றி யுடனுறைதல் இன்று என்பதும், பள்ளியில் உடனுறை வாழ்க்கையுடையாள் இவளே என்பதும் இதனால் விளங்கியது. பட்டத்துத் தேவியைப் பெருமையாக வைத்திருந்தான் என்பதும் விளங்கும். வரி 122 முதல் 146 வரை நீராடியணிகலன் புனைந்தமை கூறுகிறார் ஆசிரியர்.