| வரிகள் 110 - 116 : சிறக்கும்்் .............வருநாளிற் சொற்பொருள் : சிறப்பான இருக்கு முதலாய எல்லா மறைகளையும், எல்லா வுலகங்களையும் ஈன்றவளாகிய உமைக்குத் திருக்காமக் கோட்டம் என்ற கோவிலை விளக்கமாக அமைத்துப் பன்னிரண்டு சூரியர்களுக்கு ஒப்பாகி மணிகளாலும் பொன்னாலும் ஒளிவீசுமாறு மனைதோறும் ஒவ்வொரு தேர் வகுத்துச் செய்து இறைவனது கோயிற்றிருவீதி நான்கும் இந்திரனது முதன்மையான அமராவதி நகரத்தின் பெருவீதியினும் மேலாக விளங்கும் படி செய்து வருகின்ற நாளில். பொற்றொடியும் தானும் (73 வீற்றிருந்து), கும்பிட்டு (76), கோயிற்பணி குயிற்றி(92), திருக்காமக்கோட்டம் திகழ்வித்து(112), மனையாலோ ரோர் தேர் வகுத்து (114), பெருவீதி நாணப்பிறக்கி (116), வருநாளில் எனக் கூட்டுக. விளக்கம் : அருக்கர் என்ற பன்மையாற் பன்னிரு சூரியர் எனப் பொருள் கூறப்பட்டது. புனைஆம் - ஒப்பாகிய ; அருக்கருக்கு ஒப்பாகிய மணியென்க. மணி - மாணிக்கம். சிவப்பு ஒளியுடையது அதுவாதலின் சூரியனுக்கு ஒப்பாயிற்று. மனையால் - மனைதோறும். ஆல் என்ற வுருபு இடைவிடாமைப் பொருளில் வந்தது. "ஊரானோர் தேவகுலம்" என்றாற்போல, தேர் வகுத்து என்றது மனைகளின் மேன்முகடு தேர்வடிவமாகத் தோன்ற வேய்ந்து எனப் பொருள் தந்தது. திருக்கோயிலையடுத்துள்ள திருவீதி நான்கினும் உள்ள மனைகள் எல்லாம் தேர்போலத் தோன்றும்படி செய்து வழங்கினான் எனக் கொள்க. சோழன் செங்கணான் முன்னர்த் தில்லைத் திருக்கோயில் வீதி மாளிகைகளைத் தேர்போல வகுத்துத் தந்தான் என்று வரலாறு கூறுவதால் இவனும் அதுபோலச் செய்தனன் என்று கொள்க. இவன் தந்தை விக்கிரமசோழன் அமைத்தான் என 1913இல் எடுத்த 312 எண் கல்வெட்டுக் கூறுகின்றது. விக்கிரமசோழன் வீதி என்பது அதன் பெயர். இவன் காலத்தில் அது குலோத்துங்கன் வீதி என வழங்கியது. ஆதலால் அதனையே இவன் புதுப்பித்தான் போலும், முனைவன் - முதல்வன். இது கடவுளைக் காட்டியது. "முனைவன் கண்டது முதனூலாகும்" (நன்னூல்) என்றார் பிறரும். |