பக்கம் எண் :

பக்கம் எண் :85

குலோத்துங்க சோழனுலா
 


 

100



 


105

சிகரங்க ளாகித் திகழ - நிகரில்
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற்
கடாரம் பனிநீர் கவினிக் கனபொற்
றடாகங்க ளாகித் ததும்ப - விடாது நின்
றற்பக லாக வனந்த சதகோடி
கற்பக சாதி கதிர்கதுவப் - பொற்பூண்
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
சுரமகளி ராகித் துறும - ஒருதான்
பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம்
மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும்



 

வரிகள் 100 - 110 : நிகரில்் .............மல்க

சொற்பொருள் : உவமை கூற வியலாத ஒளிவீசும் பொன்படர்ந்த பாறைபோல் பரந்த பொலிவுடைய திருமுற்றம் விளங்கவும், தூவுகின்ற பனிநீர் பொற்கடாரங்களில் நிறைந்து அழகு பெற்றுப் பெரிய தங்கத்தடாகம்போலத் தோன்றவும், அக் கோயிலை விட்டகலாமல் நின்று இரவு பகலாகும்படி அளவற்ற கோடிக் கணக்கான கற்பகசாதிகளின் ஒளிவீசவும், பொன்னாற்செய்த பலவகைப்பூண் அணிந்த சிறந்த மங்கையர் தங்கள் தங்கள் முறைக்குவந்தபோது அவர்கள் தேவமங்கையர்போலத் தோன்ற, ஒப்பற்றதாய்த் தானே யியற்கையாகத் தோன்றிய இமயம் என்ற பெரிய தெய்வத்தன்மை வாய்ந்த மலையையும் உலகத்தார் மறக்கும்படி பெருஞ்செல்வம் நிறைய.

விளக்கம் : கடாரம் - பெரும்பானை. பொன்னாற்செய்த கடாரத்திற் பனிநீர் நிரப்பிவைத்திருப்பது தங்கமலைத் தடாகம் போலத் தோன்றியது என்பது. "கற்பகசாதி என்பது கோயில் வாகன விசேடம்" என்பது உ. வே. சா. அவர்கள் குறிப்புரை. "செம்பொற் கற்பகத்தோடு பரிச்சின்னமும், அளவில்லாத வொளி பெற வமைத்து" (விக்கிரமசோழன் மெய்க்கீர்த்தி) இதனால் பொன்னாலும் வெள்ளியாலும் பலவகை வாகனங்களியற்றி நிரலே நிறுத்தியிருந்தான் என்பதும் அவற்றின் ஒளியால் இரவும் பகலாகத் தோன்றியது என்பதும் அறியலாம். இக் கோயிலைக்கண்ட உலகத்தார் இமயமலை தங்கமலை என்பதை மறந்து இதனையே தங்கமலையாக எண்ணினர். அவ்வாறு எண்ணும்படி கோயிலிற் பெருஞ் செல்வந் தரும் பொருள்கள் அமைந்திருந்தன என்பது கருத்து.