| வரிகள் 92 - 100 : சூலத்தான்் .............ஆகித்திகழ சொற்பொருள் : சூலப்படையுடையானாகிய சிவபெருமான் ஆடுகின்ற சிறந்த பெரிய பேரம்பலமும் அதனையடுத்த கோபுரம் மாடம் விரிந்துயர்ந்த மாளிகையும் சேர்ந்து பொன் மயமான உச்சியையுடைய பெரிய மேருமலையும் அதனைச்சுற்றி வலங்கொள்ளும் சக்கரவாளமலையும் போலத் தோன்றவும், இடங்கொண்ட ஏழ்நிலையுடைய கோபுரங்கள் நெருங்கி ஏழுமலை போலத் தோன்றும்படி வகுத்தமைத்து உச்சியில் மகர தோரணங்களைக் கொண்ட கோபுரங்கள் வானில் உலவும் விமானங்கள் போலச் சிறந்து தோன்ற. விளக்கம் : பேரம்பலம் என்றது சிற்றம்பலத்தை, திருப்பெரும் பேரம்பலம் என்று அதனைச்சிறப்பித்தது, தமிழ்நாட்டிலுள்ள வெள்ளியம்பலம் செம்பம்பலம் சித்திரவம்பலம் மணியம்பலம் இவற்றிற் சிறந்தது இஃது என்பதை விளக்கியது. சிற்றம்பலமும் அதனைச் சூழ்ந்த மாளிகையும் பொன்மலையும் அதனைச் சுற்றிய சக்கரவாளமும் போன்று இருந்தன. சக்கரவாளம் பூமியைச் சுற்றி வட்டமாக வளைந்ததென நூல்கள் கூறும். ‘சுற்று நெடுநேமிச்சுவர்க் கிசைய' (மீ. பிள்ளைத்தமிழ்) எனவும் "நேமிமால்வரை மதிலாக" (கம்பரா.) எனவும் வருவன காண்க. சிற்றம்பலத்தைச் சூழ்ந்த மதிலும் பத்தியும் "குலோத்துங்கசோழன் திருமாளிகை" யெனப் பெயர் பெறும், அதற்கு வெளியேயுள்ள மதிலும் பத்தியும் விக்கிரம சோழன் திருமாளிகை என்று பெயர் பெறும். இதனை 1913 இல் அடுத்த 282,284,287 எண்ணுடைய கல்வெட்டும் உணர்த்தும். "கூடமெடுத்த குளத்தோடு கோபுர, மாடமெடுத்த பிரான்மகன் வாழியே" (தக்க. 808) என்பதுங் காட்டும். ஏழு கோபுரங்களும் ஏழு மலைபோல நின்றன. "மலை யேழுமென்ன" என்ற வுவமையால் ஏழு கோபுரங்கள்தாம் இவன் அமைத்திருந்தான் என்பது தெளிவாம். அக் கோபுரங்கள் சிதைந்தன பிற்காலத்தில் எனக்கொள்க. நிலையேழு என்றது, வாயில் ஏழுடைய கோபுரம் என்பதை யுணர்த்தும், எண்ணிறைந்த தில்லையேழுகோபுரம்" "கோயின் முனேழ்நிலை கொண்டதொர் கோபுர வாயில்" என வருவன இருபொருளுக்கும் இடமாக நின்றன. மகரங்கொள் கோபுரங்கள் என்ற தொடரில் மகரம் என்றது மகரமீன்போல வடிவமைந்த தோரணத்தை. கோபுரத்தின் உச்சியில் தோரணம் அமைந்திருக்கும் வானிலுலவும் விமானம்போல் கோபுரத்தினுச்சி திகழ்ந்தது. |