| வரிகள் 86 - 92 : அடுக்கிய் .............பணிகுயிற்றி சொற்பொருள் : அடுக்கிப் பதித்த வயிரமணியினொளி வாவிபோலவும் அதனைச் சுற்றிப் பதித்துள்ள பரவிய மரகதமணி பசிய இலைபோலவும், தூய்மையான பெரிய முத்துக்கள் தூங்குவது நீர்த்துளிகள் போலவும் பதுமராகமணி பதித்திருப்பது அழகுமிக்க செந்தாமரைமலர் போலவும், பெரிய இனமான நீலமணி பதித்திருப்பது வண்டுகளின் கூட்டம்போலவும் தோன்றுமாறு சொல்வதற்கு அரிய அழகு பொருந்தக் கோயிற் பணியான பதுமபீடம் சமைத்து. விளக்கம் : பதுமபீடம் என்பது தாமரை மலர்போன்ற வட்டமான ஆதனம் எனப் பொருள்தரும். கோயிற்பணி என்ற சொற்றொடர் "வச்சிரம் பலகை ததும்பப் பதித்து" (வ. 82) "வயிரத்தால் வாவியாய்"...........நீலத்தால் வண்டினிரையாய் (வ. 87 - 91) என மேல்வந்த குறிப்பினால் பதுமபீடத்தைக் குறித்ததாம். இது கடவுளுருவத்தை நிறுத்தும் இருக்கையெனக் கொள்க. அப் பீடம் வைரம் பதித்திருப்பதால் ஒரு வாவிபோலத் தோன்றுகிறது. சுற்றிலும் மரகதம் பதித்திருப்பது அவ் வாவியில் தாமரையல்லியின் பசிய இலைகள் படர்ந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. முத்துக்கள் மேலே தூங்குவது நீர்த்துளிகள் அவ் வாவியில் வீழ்வதுபோலத் தோன்றுகிறது. பதுமராகம் என்ற மாணிக்கம் பதித்திருப்பது செந்தாமரைப்பூ மலர்ந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. நீலமணி பதித்திருப்பது வண்டுக்கூட்டம் மொய்த்திருப்பது போலத் தோன்றுகிறது. இவ்வாறு கண்டார்க்கு வியப்பான காட்சியாகப் பீடம் அமைந்திருந்தது எனக் கொள்க. பசுமை + அடை = பாசடை = பசிய இலை. ஆலி - நீர்த்துளி. பற்பராகம் - பதுமராகம். இது மாணிக்கத்தின் ஒருவகை. இது சிவப்பு நிறமுடையது. உரை இகந்த - சொற்கடந்த, இன்னவாறு இருந்தது என எவராலும் கூறமுடியாத. கோலம் - வடிவம் - அழகு. |