| வரிகள் 80 - 86 : பசும்பொன் .............தீபமேற்றி சொற்பொருள் : அப் பசும்பொற் பலகையில் எண்ணிறந்த மலைகளிலுள்ள நல்ல வயிரத்தை நிறையப் பதித்துந் தன் விரிந்த குடையாற் காக்கும் ஏழு கடலில் உள்ள முத்துக்களை, மேலான கங்கையாற்றுக்கு இமயமலையினின்று வரும் அருவிபோலத் தூக்கி, பார்வை தொடர்ந்திருக்கும் பல தலையுடைய ஆதிசேடன் என்ற பாம்பின் முடிமணி (நாகரத்தினம்) யாற்செய்த உயர்ந்த திருவிளக்குச் செய்தமைத்து. விளக்கம் : அலகை - அளவை - இகந்த - கடந்த - அளவு கடந்த; எண்ணமுடியாத. எண்ணமுடியாத வச்சிரம். இவற்றைப் பதித்த பொற்பலகை. இது பதும பீடம் என்று கொள்க. விக்கிரகம் பதித்திருக்கும் இடம் இது. பொற்றகடு வேய்ந்த கோயில் வாயிலின் முத்துக்களைத் தொடுத்துத் தூக்கியது இமயமலைமேனின்று கங்கையாற்றுக்கு வந்துசேரும் அருவியைப் பான்றிருந்ததெனக்கொள்க. வரகங்கை - மேலான கங்கை. இது மிகவும் வெண்மையுடையது; பிற யாறு பலவினும் சிறப்பு வாய்ந்தது; அதற்கு வரும் அருவி மிகவும் வெண்மையுடையது என்பதை எடுத்துக்காட்டியது. குறிப்பினாற் பொன்மலை மேனின்றிழியும் அருவியென்பது தோன்றிற்று : பொன்னம்பலத்திற் றூக்கிய முத்து மாலைகள் பொன்மலையினின்றிழியும் அருவிபோல இருந்தது என உவமை கூறினர் எனக் கொள்க. "கவிகைகாக்குங் கடலேழின் முத்தும்" என்றது எழுகடல் வளைந்த புவியும் இவனாட்சியில் அடங்கியதைக் காட்டியது. நோக்கம் தொடரும் - பார்வையைக் கவரும் எனவும் பொருள் கொள்ளலாம். சூடாமணி - தலைமணி, இது வடமொழி. சேடன் முடிமணியும் இவனுக்கு எளிதிற் கிடைத்தது. அதனைக் கொண்டே விளக்கமைத்தான் எனக்கொள்க. |