பக்கம் எண் :

பக்கம் எண் :81

குலோத்துங்க சோழனுலா
 


 

74





80
 
அவனி சுரர்சுருதி யார்ப்ப - நவநிதிதூய்
ஏத்தற் கருங்கடவு ளெல்லையி லானந்தக்
கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேல்
தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லல்
தசும்பு வளர்கனித் தண்பெரு நாவல
அசும்பு பசும்பொ னடுக்கிப் - பசும்பொன்


 

வரிகள் 74 - 80 : அவனி சுரர் .............அடுக்கி


 

சொற்பொருள் : மண்ணுலகத்தாரும் தேவர்களும் வேதங்களும் துதித்து ஒலிபெருக்க ஒன்பதுவகை மணிகளையும் தூவித் தொண்டர்களால் துதிப்பதற் கருமையான தெய்வமாகிய சிவபெருமானது எல்லையிலா ஆனந்தக் கூத்தினைக் கண்டு மனக்களிப்பு மிகக் கைகுவித்து வணங்கிக் கருடன்மேல் ஏறிவரும் தில்லைத் திருமுன்றிலிலுள்ள சிறு தெய்வத்தின் பழைமையாகிய போர் தொலையும்படி எடுத்தெறிந்து (அப்புறப்படுத்தி) வளம் பொருந்திய பூரணகும்பங்களைக் குளிர்ந்த பெரிய நாவற்கனிச் சாறுகலந்த பசும்பொன்னால் அடுக்கடுக்காக அமைத்து.

விளக்கம் : நவநிதி தூய் என்பது ஏழைகட்கும் அடியார்க்கும் ஒன்பதுவகை மணிகளையும் கொண்டுவந்து பலவகைத் தானம் வழங்குவதைக் குறித்தது. கடவுளை வணங்க வருவார் தெய்வத்தின் முன்னின்று தானஞ் செய்வது உயர்வாம். ஏத்து - துதி : தருங்கடவுள் என்றது தன்னை வணங்கும் அடியார்களுக்குத் துதியைத் தருகின்ற தெய்வம். துதி என்பது பிறரால் துதிக்கப்படும் உயர்வை யுணர்த்தியது. யாவரும் துதிக்குமாறு செய்யும் தெய்வம், தன்னை வணங்கும் அடியார்களைத் தன்னினும் உயர்வாகக்கருதி யெவருந் துதிக்கும்படி செய்யும் தெய்வம் என்பது கருத்து : எல்லையில் கூத்து ஆனந்தக் கூத்து எனத் தனித்தனி கூட்டுக. கூத்தினைக் கண்டவர்மனம் களிகூரும் என்பது "ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள வளப்பருங் கரணங்க ணான்கும், சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந் திருந்துசாத் துவிகமே யாக, இந்துவாழ் சடையா னாடுமா னந்த வெல்லையி றனிப்பெருங் கூத்தின், வந்தபே ரின்ப வெள்ளத்துட்டிளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்" (பெரிய. தடுத்து. 106) என்ற பாடலிற் காண்க. போத்து - பறவையின் ஆணுக்குப் பெயராய் இங்கு ஆண்கருடனை யுணர்த்தியது. போத்தின் மேல் (இருக்கும்) தில்லைத் திருமன்றமுன்றிலில் இருக்கும் சிறுதெய்வம் என்க. எனவே கருடன்மேல் ஏறிவருந் திருமால், தில்லைத் திருமன்ற முன்றிலில் இருக்குந் திருமால் என்பது பொருளாம். சிறு தெய்வம் என இழிவு கூறியது, தொல்லைக் குறும்பு என்பது பழைமையாக வரும்சைவ வைணவ மதப்போர். சிவபெருமான் முன்றிலில் திருமாலை வைத்து வணங்குவதால் வரும் போர். இது தொலையவேண்டுமென்று கருதித் திருமால் விக்கிரகத்தை யெடுத்துக் கடலில் எறிந்தான் என்று கொள்க. தொலைத்து என்பதைத் தொலைக்க என மாற்றிப் பொருள் கொள்க. வேறிடத்திருந்தால் இப் போர் நிகழாது எனக் கருதி யெடுத்தெறிந்தான் என்பது கருத்து.


 

      தில்லைத் திருமன்ற முன்றிலிற் சித்திரகூடத் திருமால் கோயில் இருந்தது என்பதும், அதனைக் குலோத்துங்கன் எடுத்துக் கடலில் எறிந்தான் என்பதும் அடியில் வரும் செய்யுட்களால் அறியலாம். "புரங்கடந் தானடி காண்பான்.........வரங்கிடந் தான்றில்லை யம்பல முன்றிலம் மாயவனே" (திருக்கோவையார் 86), "முன்றிற் கிடந்த தடங்கடல்போய் முன்னைக் கடல் புகப் பின்னத்தில்லை மன்றிற் கிடங்கண்ட கொண்டல்" (தக்க. 777) "அம்பொற் கொடைச்சகர னாயிரத்தின் மேனாற் பத்தொன்பதாம் வர்ஷத் துயர்தில்லைத் தென்பாலிற் சென்னி குலோத்துங்கன் சித்திரகூடத் திருமால், தன்னையலையெறி நாடான்" (இராமாநுஜ திவ்ய சரிதை) "புறம்பிற் குறும்பெறிந்து முன்னிற் கடலகழின் மூழ்குவித்த சென்னித்திருமகன் சீராசராசன்" (இராசராச. 65 - 67) என்பன இவை.

      மல்லல் தசும்பு - வளமான குடம் : அழகானகுடம்; நிறைகுடம். (பூரண கும்பம்). தன் பெருநாவல் வளர்கனியசும்பு என மாற்றுக. அசும்பு - நீரூற்று. இது கனிச்சாற்றினை யுணர்த்தியது. நாவற் கனிச்சாற்றில் ஊறிய பொன் சாம்பூநதம். ஆடகம், கிள்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்ற நால்வகைப் பொன்னில் இதுவே உயர்ந்தது. பசும்பொன், பத்தரைமாற்றுத் தங்கம் என்பதும் இதுவே. இப் பசும்பொன்னாற் பூரண குடங்கள் அடுக்கடுக்காகச் செய்தமைத்து என்க. முன்றிலில் இருந்த திருமால் விக்கிரகத்தை எடுத்தெறிந்து அவ்விடத்தில் பசும்பொன்னாற் பூரண கும்பம் செய்தமைத்தான், எனக் கொள்க. தசும்பு என்பதற்குப் பொன் எனப் பொருளுரைத்து, பொன் வளரும் நாவலந் தீவிலுள்ள பசும்பொன்னடுக்கி மதிலமைத்து எனப் பொருத்தினும் இயையும்.