வரிகள் 64 - 73 : நாட்டுமுறைவிட்ட .............பொற்றொடியும் தானும் சொற்பொருள் : தம்நாட்டு அரசுரிமையை யிழந்து சிறைப்பட்ட பகைவர் ஆகிய பேரரசர்களைச் சிறைநீக்கி அவரவர் நாட்டுரிமையை யளித்து விடுத்து, இறையையும் நீக்கிக் கரிய மலைகள் எட்டும் மதயானைகள் எட்டும், படத்தையுடைய பாம்புகள் எட்டும் தாங்கிய பூமிபாரத்தைத் தான் தாங்கி அவற்றின் சுமையை நீக்கி இவ்வுலகத்தைத் தன் தந்தைக்குப்பின் சூரியனுக்கும் தோற்றுப்போகாத ஞானத்தைக் கெடுக்கும் இருளாகிய அஞ்ஞானச்சுமையை மக்களிடத்தினின்றும் நீக்கி உடனிருந்து முடிசூடிய உரிமைக்குத்தக்க தலைமைவாய்ந்த ஒப்பற்றதன் தேவியாகிய "புவனி முழுதுடையாள்" என்ற மங்கையும் தானுமாக வீற்றிருந்தது. விளக்கம் : குலோத்துங்கன் முடிசூடியபின் சிறையிருந்த வேற்றரசர்களைச் சிறைநீக்கி அவரவர்க்குரிமையை யளித்தான். வரியை நீக்கினன், மக்கள் உள்ளத்தில் உள்ள அஞ்ஞானத்தை நீக்கினன், தன்னுரிமைத்தேவி புவனமுழுதுடையாளுடன் வீற்றிருந்தான் என்பது இங்குக் கூறப்பட்டது. முறைவிட்ட என்பது அரசிழந்த என்ற பொருளில் வந்தது. முறை என்பது நீதி, அஃது ஆகுபெயராய் அரசினையுணர்த்தியது. வேற்றுமன்னர்; முடிமன்னர் எனக் கூட்டுக. முடிமன்னர் - பேரரசர். கறை - கப்பம்; இறை - வரி, விட்டுநீக்கி. நாகம் - ஞாகம் எனப் போலியாய் நின்றது. நாகம் என்ற பாடமும் உள்ளது. பரம், பாரம் என்பதன் குறுக்கம். இது செய்யுள் விகாரம். இப் பூமியின் எட்டுத் திசையிலும் எட்டு யானைகள் எட்டுமலைகள் எட்டுப் பாம்புகள் நின்று தங்குகின்றன என்று கூறுவது இலக்கியமரபு. இவற்றின் பெயர்கள் அகராதியிற் காண்க. அம் மரபுப்படி "எட்டும் பரம்தீர" என்றார். அவை முதலிற் சுமந்துநின்றன; குலோத்துங்கன் முடிசூடியபின் அப் பாரம் நீங்கியது எனக் கொள்க. முறைப்படி அரசுபுரிவது பூமிபாரம் தீர்ப்பதாம். நல்லோரைப் புரந்து தீயோரையழித்தலே முறைசெய்தலாம், "தாதையின் பின்பு" என்பது தாதையிருக்கும்போதே பட்டந்தரித்து இரண்டு ஆண்டு உடனிருந்தான் எனினும் அக்காலத்தில் தந்தையாட்சியாகவே யிருந்தது. தான் ஒன்றும் முறை செய்திலன் என்பதை யுணர்த்தியது. தபனன் - சூரியன். அவனாலும் நீக்கமுடியாத இருள் எனவே அஞ்ஞானம் என்பது குறிப்பால் தோன்றியது. திமிரம் - இருள். போதம் - ஞானம். போதத்திமிரம் என்பது போதத்தைக் கெடுக்கும் திமிரம் என இரண்டனுருபும் பயனும் தொக்க தொகையாக நின்றது. தோலாத திமிரம் எனவும் கூட்டுக. பொறை என்பது பாரம்; சுமை, இது மக்கள் உள்ளத்திற் பெரும்பாரமாக நின்றது. அதனை நீக்கினன் என்பது. எனவே கல்வியறிவைப் பெருக்கினன் என்பது கருத்து. கல்வியலான்றி அஞ்ஞானவிருள் நீங்காது. இதனை "வெங்கதிர்க்குஞ் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது, பொங்குமதியொளிக்கும் போகாது - தங்கும், வளமையான் வந்த மதிமருட்சி மாந்தர்க், கிளமையான் வந்த விருள்" (தண்டி. சூ. 48 மேற்.) எனக் கூறியிருப்பது காண்க. தலைமைத்தேவியுடனிருந்து முடிசூடுதல் வழக்கு என்பதை "ஒக்க வபிடேகஞ்சூடும்" என்ற தொடர் உணர்த்தியது. இந்நூல் வரி 121 இல் ‘மடமயிலொக்க மகுடங் கவிழ்த்தாள்' எனவும், பெருங்கதையில் "திருமகள்போல வொருமையினொட்டி, யுடன்முடி கவித்த கடனறிகற்பின், இயற்பெருந்தேவி" (2, 4 : 22, 24) எனவும் வருவன இவ் வழக்குண்மையை யுணர்த்தும். புவனி முழுதுடைய பொற்றொடி என்பது "புவன முழுதுடையாள்" என்ற பெயரை யெடுத்துக் காட்டியது. தியாகவல்லி என்பவளும் இவளே. மற்றொரு மனைவி முக்கோக்கிழான் என்பவள். பொற்கொடியும் தானும் (கூடியிருந்து) என வருவித்துக்கொள்க, தில்லைத் திருக்கோயிற்றிருப்பணி செய்த சிறப்பு இனிக் கூறுவார், அரசன் தானே புரிந்தான் என்று கூறுவது சிறப்பன்று, கூடியிருந்து புரிந்தான் எனக் கூறுவதே சிறப்பு ஆதலால் "பொற்றொடியும் தானும்" என்றார். |