வரிகள் 57 - 64 : கொற்றக் .............சூடியபின் சொற்பொருள் : வெற்றியையுடைய குலோத்துங்க சோழன், உலக முழுவதையும் காக்கும் மேக நிறத்தையுடையவன்; அழகிய துவரை என்ற ஊரில் சந்திரகுலத்தில் வழிவழியாய் வந்த சிறந்த குலத்திற் பிறந்து மனுகுலத்தை வாழும்படி செய்ய விக்கிரம சோழனுக்கு வாழ்க்கைத் துணையாக வந்த பசிய தளிர்போன்ற செங்கையுடைய அழகிய பிடிபோன்ற விதுகுலநாயகி பெற்ற யானைபோன்றவன். அவ் யானையின் விருப்பமான கனகளபன் என்ற பெயருடையவன். எதனாலும் எழுதற்கு அருமையான வடிவமுடைய திருவின் செல்வி தனக்கு மணமாலை சூட்டியபின் சிறந்த முடிசூடி அரசுரிமை யேற்றபின்னர். விளக்கம் : முகில்வண்ணன் பிடிபெற்ற வாரணம், கனகளபன் ஆகிய கொற்றக் குலோத்துங்கன் எனக் கூட்டுக. முகில் வண்ணன் - திருமால். இது திருமாலையொத்தவன் காக்குந் தொழிலால் எனச் சிறப்பித்தாம். கரிய நிறமுடையவன் எனக் காட்டியதுமாம். மாதர்ப்பிடி - அழகிய பெண்யானை. இது மேல் வந்துள்ள குறிப்பினாற் குலோத்துங்கன் யீன்ற தாயைக் குறித்தது. பெண்யானை பெற்ற ஆண்யானை எனவே குலோத்துங்கன் என்பது குறிப்பினாற் புலப்பட்டது. இந் நூல் 224. வரியில் ‘விதுகுலநாயகி சேய்' என வந்திருப்பதால் விதுகுல நாயகியே குலோத்துங்கனை யீன்ற அன்னையாவள். இவள் பெயர் தியாகவல்லி. புவனமுழுதுடையாள் என்று கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. விக்கிரம சோழன் மனைவியர் பலர் என்றும், முக்கோக்கிழானடிகள், தியாகபதாகை, தரணிமுழுதுடையாள், நம்பிராட்டியார், நேரியன் மாதேவியர் என நால்வர் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது என்றும் சோழர் வரலாறு (பக்கம் 46. டாக்டர் மா. இராசமாணிக்கனார்) கூறுகிறது விதுகுலுநாயகி என்ற பெயர் இவ்வுலாவில்மட்டும் தான் வந்துள்ளது. டாக்டர் உ. வே. சா. அவர்கள் குறிப்புரையில் "விக்கிரம சோழன் மனைவியரில் ஒருத்தி விதுகுலநாயகி என்றும், பெண் சக்கரவர்த்தி என்றும் சிறப்பிக்கப் பெறுவள். இவள் துவராபதியாண்ட ஒரு வேளிர் கோமான் மகளாவள். இவளே இந்து மரபில் வந்து சோழ குலமாகிய மனுகுலத்து விக்கிரம சோழனை மணந்தவள். இவள் பெயர் தியாகவல்லி. புவனமுழுதுடையாள் என்று சாசனங்கள் கூறும்" என்று வரைந்துள்ளார். விது - சந்திரன். குலம் - மரபு. இதுவே "இந்து மரபில்" என வந்ததுபோலும். "அவ்வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன்' என்ற தொடர்ப்பொருள் விளக்கம் "யானைக்குரிய சிறப்புப் பெயராகிய கனகளபம் என்னும் பெயரினையுடையவன்; கனகளபன் - மேக நிறத்து யானைபோன்றவன்; இஃது அவனது கரிய நிறம்பற்றி வந்த பெயர்" என்பதும் அவர்கள் குறிப்புரையிலுள்ளது. அப் பொருள் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் வேறு பொருள் காண்பதரிது போலும், பழையவுரையில் பிதா "[வானபாண்டியன் முதலியாரைக் கும்பிட] அவர் யோகீசரான காலையிற் மேர் வராணவாசித் தேவர்" என்று காணப்படுகிறது. இதன் பொருளும் விளக்கமாகத் தேன்றவில்லை. ஆய்ந்து காண்க. திருவே திருமாலை சூட்ட என்பது திருவின் செல்வி என்ற பெயருடையவள் சிறந்த மணமாலையைச்சூட்டி மாதேவியானபின் என்று பொருள் கொள்க "திருமகுடஞ் சூடியபின்" என்பதனை இளவரசனாக முடிசூட்டியபின் என்று கொள்வதே பொருத்தமாகும்; பின்வரி 71இல் "ஒக்க வபிடேகஞ் சூடுமுரிமைக்கண்" என்று வருவதால் பட்டத்துத் தேவியும் தானும் இருந்து முடிசூடுவதே முறை என்பதும் திருமணம் முடிப்பதற்குமுன் இளவரசுப் பட்டந்தந்து முடிசூட்டுவது இயற்கை என்பதும் மன்னர் பலர் வரலாற்றால் அறியலாம். |