வரிகள் 53 - 56 : பூதலங்கள் .............பெருமான் தரும் புதல்வன் சொற்பொருள் : பூமிபாரத்தைச் சுமந்த சிறந்த புயங்களையுடைய அகளங்கன் என்ற பட்டம் பெற்றவன்; பகைவர் விரும்பிய கோட்டைகளிற் போர் புரிந்து களவேள்வி செய்து கலிங்கப் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று அவ் வெற்றி குறித்துப் பாடிய கலிங்கப் பெரும்பரணியாகிய நூலை யேற்றுக் கொண்ட வேந்தன் ஆகிய விக்கிரம சோழ தேவன் பெற்ற மைந்தன். விளக்கம் : அகளங்கன் என்பது விக்கிரம சோழன் பெயர், இவன் கலிங்கப் போரில் வெற்றி பெற்றுப் பரணி நூல் ஒட்டக்கூத்தராற் பாடப்பெற்றவன் என்று புகழப்படுகிறான். அப்பரணி நூல் இதுகாறும் கிடைத்திலது. வேற்றார் - பகைவர். விரும்பு + அரணில் எனப் பிரிக்க. வெங்களத்தீ வேட்டு - வென்று. "செருத்தந் தரித்துக் கலிங்கரோடத் தென்றமிழ்த் தெய்வப் பரணி கொண்டு வருத்தந் தவிர்த்துல காண்டபிரான் மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே" எனவும், "இப் பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள், பரணிபாட்டுண்டார் விக்கிரமசோழ தேவர்" எனவும், தக்கயாகப்பரணி 776 கவியும் உரையும் கூறுவது காண்க. "தரணியொரு கவிகை தங்கக் கலிங்கப், பரணி புனைந்த பருதி - முரணில், புரந்தர னேமி பொருவு மகில, துரந்தரன் விக்கிரமசோழன்" (இராசரா. உலா, 53 - 56) என வருவதும் இதனை வலியுறுத்தும். அகளங்கன் என்ற பெயர் பலவிடங்களில் அமைந்துள்ளது. திருவரங்கத்தில் ஒரு வீதி அகளங்கன் வீதி, பூவாளூருக்கு அருகில் உள்ள ஊர் அகளங்கநல்லூர், சிதம்பரம் ஆயிரக்கால் மண்டபத்திற்குக் கிழக்கே ஒரு தூணிலுள்ள கல்வெட்டு அகளங்கன் மண்டபம், விக்கிரம சோழ னுலாவில் 117, 303, 363, 417, 511, 567 வரிகளில் அகளங்கன் இறுதி வெண்பாவில் வையமளந்தா யகளங்கா, தனிப்பாடல் "அகளங்காவுன்ற னயிரா வதத்தின் நிகளங்கால் விட்ட நினைவு" என வந்திருப்பன காண்க. அகளங்கன் - களங்கமில்லாதவன் : உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் என்பது பொருள். பெருமான் என்பது விக்கிரம சோழன் எனவும் தரும்புதல்வன் என்பது பாட்டுடைத் தலைவனாகிய குலோத்துங்கன் எனவும் கொள்க. இனிமேல் வருவனவெல்லாம் குலோத்துங்கன் செயலெனக் காண்க. |