| வரிகள் 572 - 586 : தானே .............புறங்கொடுத்தாள் சொற்பொருள் : அவ் வரிவை தானேநின்று மலர்ந்த முகமும் குவிந்த கைகளுமாகிய மலர்ந்தபூவும் அரும்பும்போலப் பலரும் பார்க்கும்படி தேனும் பாலுங் கலந்ததுபோன்ற இனிய சொற் பேசுகின்ற மான்போன்றவள் மனமுழுவதும் கொடுத்தாள் (நினைவு மறந்தாள்) சோழனும் தடுக்காமல் தடுத்த அவளைக் கடைக்கணணால் நோக்கி யானையை நிறுத்தாது விரையச் செலுத்தினான். சாாயாத கொங்கைகளின்மேல் ஒரு தன்மையாக வெயர்வை முத்துப்போல் விளங்க அதனால் மணம் பொருந்திய கழுத்து முத்தீனும் சங்க நிதியைப் போன்றாள்; எல்லாத்திசைகளிலும் கழன்று வீழ்கின்ற தொடிக்கையுடைமையால் செம்பொன் வளையலும் வாகுவலயமும் அளிக்கின்ற தாமரைநிதியம் போலத் தோன்றினாள்; ஆராய்ந்தால் இடையுடுத்த துகி லல்குலினின்று நெகிழ்வதால் தோல் உரிந்துவிழும் சட்டைகழலும்) பாம்புப்படத்தை யொத்தாள் : தளிர் தோன்றிய மாங்கொம்பு போல வந்தவள். பாலையிலுள்ள மரக்கொம்புபோல உலர்ந்து வனப்பு இழந்தாள். விளக்கம் : குவிகை : வினைத்தொகை. குவிந்த கை. முகுளம் - அரும்பு. மலர்ந்த முகமும் குவிந்த கையும் முறையே பூவும் அரும்பும்போலத் தோன்றியது பலர்காண. தீங்கிளவிமான் - இனிய சொற்பேசும் பெண். மான் : உவமையாகு பெயர், மனம் அடைய கொடுத்தாள் என மாற்றுக. அடைய - முழுவதும், மனதைப் பறிகொடுத்தாள். மனம்போனது எனவே நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு முதலிய பெண்மைக் குணங்கள் நீங்கின என்பது தானே தோன்றிற்று. பாங்கியர்களை விடுத்து எதிர் நிறுத்தி நில் என்று சொல்லி நிறுத்தித் தடுக்காமல் தானேவந்து எதிர் நின்று அறிவழிந்து மயங்கி நின்றதும் உலாவைத் தடுத்ததுபோலத் தோன்றியது என்பார் "தடாதே தடுத்தாளை" என்றார். விடாதே என்பதற்குக் களிற்றை அவ்விடத்தில் நிறுத்தாமல் என்றாவது அவள் நின்றவிடத்திற்கு விடாமல் என்றாவது பொருள் கொள்க. படாம்முலை - துகிலால் மூடிய முலை எனவும் பொருள் தரும். கழுத்தினைச் சங்கநிதியாகவும் கழுத்திற்குக் கீழ்க் கொங்கைகளில் அரும்பிய வெயர்வைத் துளிகளை முத்துகளாகவும் கொண்டு சங்கநிதியை நிகர்த்தாள் என்றார். சங்கு முத்தீன்றதுபோல வேர்வைத்துளிகள் விளங்கின என்க. காதலால் உடல் மெலிந்து கைவளையும் தோள்வளையுங் கழல நின்றாள். அவள் நின்றநிலை பதுமநிதிபோலத் தோன்றியது. பொற்றொடியும் பொன் வலையமும் வேண்டியவர் எடுத்துக்கொள்ளுமாறு வீசியெறிவதுபோல விளங்கியது அவள் நிலை. அல்குலைச் சூழ்ந்துடுத்த ஆடை நெகிழ அவள் நின்ற நிலை பாம்புப் படத்தில் தோல் உரிந்துவிழ அரவம் நின்ற நிலைபோல இருந்தது. சுரம் - பாலைவனம். சுரமரப்பூங் கொம்பர் எனவே பட்டமரக் கொம்பு என்பது பொருளாயிற்று. தளிர்த்த மாங்கொம்புபோல வந்தவள் பட்டமரம்போல அழகிழந்து உடல்மெலிந்து நின்றாள். குலோத்துங்க சோழன் உலாக் காண வந்த அரிவை இவ்வாறு காதலால் வாடிக் கலங்கி நின்றனள் எனக் காண்க. |