வரிகள் 586 - 600 : பாங்கியரும் .............சாற்றினார் சொற்பொருள் : அப்போது பாங்கிமாரும் இம் மன்னன் ஒன்றாகிய உடைவாளையுடைய ஒரு பாகத்தில் துர்க்கையைக் குடியாக வைத்திருந்தாலும் மற்றொரு பாகத்தில் இவளைக் குடியாக வைத்திலனே! உரிமை பெற்றுடைய பூமாது வாழும் ஒரு தோளுக்கெதிராகிய மற்றொரு தோளை இவளுக்குத் தந்திலனே! நேராக இவளுக்கு ஒப்புடைய திருமகளுக்கு இடமாகத் தந்த உயர்ந்த மாலையணிந்த மார்பினை இவளுக்கும் தந்திலனே? அரசர்க்கரசனாகிய சோழன். அன்னங்களே! நீங்கள் சென்று இவள் நிலையை அம் மன்னனுக்குக் கூறுங்கள்; புறாக்களே! இன்னும் அடைக்கலமாகப் புகுந்து அவன்பாற் சேருங்கள்; நல்ல நெற்றியுடைய பாவைகளே! கொல்லும் யானையின் பரந்த அடியின் கீழ்ப்பணிந்து வேண்டுங்கள்! காகணவாய்ப் பறவைகளே! அறநெறியை எடுத்துக் கூறுங்கள். அறியாமையும் இளமையும் உடைய பெண்மான்களே! தாவிச்சென்று அவனை வளைத்து வருத்துங்கள். மாலையில் தேனுண்ணும் வண்டுகளே! அவனை யழைப்பீர். இவ்வரிவையின் துன்பத்திற்கு முடிவு யாது என்று மனமிரங்கி அவளது காதனோய்க்கு மாற்றாக அவளெதிரே கூறினர். விளக்கம் : பாங்கியரும்(586) சாற்றினர்(600) என வினை முடிவு கொள்க. இலங்கிழை - விளங்கும் அணிகலம் பூண்டவள் (அவ்வரிவை). ஆர்வம் - காதல். மாற்று - அக் காதலை மாற்றுவதற்குத் தக்க கூற்று. எதிர் - அவளுக்கெதிர் சாற்றினர். அவனுக்கு எதிர் எனக் குறிப்புரை (பழையவுரை) யிருப்பினும் அது பொருத்தமன்று; "களிறகல விட்டான்" (578) என முன் வந்திருப்பதனால் அவன் யானையை நடத்தி இவ்வரிவை நிற்கும் இடத்தை நீங்கிச் சென்றான் என்பது தோன்றுதலின். அவள் மயங்கி நிற்க அவளுக்குத் தேறுதலாகப் பாங்கியர் கூறினர் என்று கொள்க. வேந்தர்கோன் வைத்திலனே, அளித்திலனே, இசைந்திலனே என்று முதலிற் கூறினர். கொற்றவை - துர்க்கை; வீரச்செல்வி. உடைவாள் இடையிற் செருகியிருப்பது. அதன் புடையாளாகிய கொற்றவை என்க. அவ்வுடைவாளின் அருகிற் கொற்றவை யிருப்பதாகக் கூறுவது இலக்கிய மரபு. அவள் வெற்றியைத் தருபவள் ஆதலின் உடைவாளின் மருங்கிருப்பாளாயினள். இடையின் ஒரு புடை கொற்றவையிருப்பினும் மற்றொரு புடையில் இவளை வைக்கலாம் அன்றோ? கொற்றவை போலவே இவளும் வீரச்செல்வி தானே! ஏன் இவளை விரும்பாது செல்கின்றான் என்று தம் தலைவியைப் பெருமையாகப் பேசினர் என்க. புடை - பக்கம். வாரம் பெற்றுடைய என மாற்றுக. வாரம் - உரிமை; கிழமை. தோளில் வீற்றிருப்பதற்கு உரிமை பெற்றவள் தரணியாள் என்பது. தரணியாள் - பூமாது. தோள்வலியாற் பூமியை அடக்கியாள்வோர் மன்னர் ஆதலால் அவர்கள் தோளிற் பூமாது தங்கியிருப்பாள் எனக் கூறுவது மரபு. பூமாதுக்கு ஒரு தோளைக் கொடுப்பினும் மற்றொரு தோளை இவட்குத் தங்கும் இடமாகத் தரலாம் அன்றோ? தந்திலனே. பூமாது போன்றவள் பொறுமையில் இவள் என்பதை யறியாமலன்றோ மன்னன் செல்கின்றான்? பூந்தாமரையாள் - திருமகள். அவள் போன்றவளே யாவள் வனப்பினால். இவளையும் மார்பின்கண் இருத்தலாமன்றோ? அதனையும் செய்திலன் அரசன். நாம் என் செய்வம் என்று இரங்கினர் எனக் கொள்க. பின்னும், அப் பாங்கியர், அன்னம், புறா, பாவை, பூவை, மான்பிணை, மதுகரம் இவற்றை யழைத்துத் தூதுபோய் வரும் படியும் கூறினர். அவ்வரிவை வளர்த்வை அவை எனவும், பாங்கியரும் அவற்றை நோக்கிப் பரிவுடன் மயங்கிக் கூறியதாகவும் கொள்க. பாவைகள் - பதுமைகள்; சித்திரங்கள். விளையாடுவதற்காகக் கையில் வைத்திருந்தனர் போலும். அவற்றை நோக்கியும் பேசினர் எனக்கொள்க. கபோதங்கள் - புறாக்கள். அரற்றீர் என்றது; இவள் துயரந்தோன்றப் புலம்பிக் கூறுங்கள் என்ற குறிப்புக் காட்டியது. மன்னுயிருந் தன்னுயிர்போலக் காக்க வேண்டியது மன்னனுடைய கடமை என்ற நீதியையெடுத்துக் கூறி இவளைக் காக்குமாறு வேண்டுங்கள்; என்ற கருத்துத்தோன்ற "செங்கோன்மை போற்றி செய்யீர்" என்றார். போற்றி செய்யீர் - போற்றுதல் செய்யுங்கள்; போற்றுங்கள். எனவே நெறிமுறையைக் காப்பாற்றுமாறு வேண்டுங்கள் என்பது குறிப்பாயிற்று. வளைத்து உளையீர் என்றது மன்னன் உலாப்போம் வழியில் நின்று வளைத்து நாற்புறமும் செல்லவிடாது வருத்துங்கள். ‘நீங்கள் வருத்துவது கண்டாவது இவள்பால் யானையைத் திருப்புவான்' என்ற குறிப்புத்தோன்ற நின்றது. பிணைகள் - பெண்மான்கள். பேதை - அறியாமை. மடம் - இளமை. இன்னது செய்வது என அறியாது எங்களுடன் நிற்கின்றீர்களே என்ற குறிப்புக் காட்டியது பேதை என்ற அடைமொழி. அன்னங்கள் கபோதங்கள் முதலிய செற்காள் ஈற்றயனீண்டு விளியாயின. பா + அடி பரவிய அடி; அகலமான அடி. யானையின் பாதம் உரல்போல அகலமாக இருப்பதால் அவ்வாறு கூறுவதும் மரபு. "பாவடியாற் செறனோக்கின்...........களிறு" எனவும், "பாவடி பணைத்தாள்...........யானை" எனவும் (புறம் 15, 72) வருவன காண்க. இதற்கு எல்லை யாது என்னா இரங்கி எனக் கூட்டுக. இத் துயரத்தை நீக்குவதற்கு வழியென்ன என்று வருந்தி இவற்றைக் கூறினர் எனக்கொள்க. அரிவை செயல் முடிந்தது. இனித் தெரிவை செயல் தொடங்கும். |