பக்கம் எண் :

பக்கம் எண் :126

குலோத்துங்க சோழனுலா
 


 

600









610
தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப்
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்
இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப்
போதும் பெருமாள் புகுது மளவுமிங்
கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம்
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும்
கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே
அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே
கொண்டா ளருகிருந்த பாணருங் கோடியரும்
கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி
எடுத்தா ரெடுத்தன யாவு மெவரும்
கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம்



 

வரிகள் 600 - 614 : பின்னர்ப் .............வருகென்றாள்

சொற்பொருள் : அதன்பின் பெண்களிலொருவரும் ஒப்பில்லாத (தானே தனக்குவமையான) ஒருத்தி (தெரிவை) தன்னைப் புறங்காத்து நின்ற மாதரிற் சிலர் இரண்டுவிற் கிடக்கும் இடத்திற்கு அப்பால் நின்று வணங்கி அவளை நோக்கி "நாம் குலோத்துங்கன் சிறந்த பவனிவரும் வரையும் இங்கு ஓர் ஆடலும் பயிலாமல் இருப்போமா? சூதாடமாட்டோம்; பந்தாடுவோம் நாம்; பசும்பொற் காதணிகள் வரையும் சென்று மறித்துத் திரும்பும் கண்ணுடையாய்! வருக என்றழைக்கச் சந்தனம் பூசிய வட்டமான கொங்கைகளையும் தோளிணையையும் பாரமென்று குறியாமல் அழகிய மெல்லிய இடையையும் நோக்கியஞ்சாமல் பாங்கியர் தம்முடனே விளையாடத் தொடங்கினள். அருளில் இருந்த பாணர்களும் கூத்தரும் கண்டவர்கள் யாவரும் அவளோடு பந்தாடுதற்கு விரைந்தார். அவளுடன் நெருங்கிப் பந்தினை எடுத்தவர்கள் யாவரும் எடுத்த பந்துகள் எல்லாவற்றையும் அவளிடமே கொடுத்தார்கள். கொடுத்த பந்துகளையெல்லாம் அவள் ஒருத்தியே வாங்கினாள். அடுத்து அடுத்து முன்னர் எறிந்த பந்தினும் மூன்று மடங்கு நான்கு மடங்காக இன்னும் எறிய என்னோடு வருக என்று கூறி நின்றாள் அத்தெரிவை.

விளக்கம் : பின்னர் ஒருத்தி எனவே அரிவையின் செயல் கூறி முடிந்த பின் வந்தவள் தெரிவை என்பது குறிப்பாற் புலப்பட்டது. பொருவில் - ஒப்பற்ற. தெரிவையின் சிறப்பு "பொருவில்" என்பதுதான். ஆசிரியர் தெரிவையைச் சிறப்பித்துக் கூறக் கருதிலர் போலும். "பொருவிலொருத்தி" எனக் கூறிவிடுத்தனர். இருவிலிடை - இரண்டு விற்கிடக்கும் தூரம். இவ்வாறு கூறுவது அக்கால மரபு போலும்! "ஆங்கது தனக்கோ ரைவிலின் கிடக்கை, நீங்காது நின்ற நேரிழை தன்னை" (மணிமே, 4. 89, 90) எனவும், "இருவிற்கண், பொங்க விடு தவிசி லிழிந்தான் போரே றனையானே" (சீவக, 2608) எனவும் வருவன காண்க. பெருமாள் என்றது சோழனை. திருமால் கோயிலுக்குப் பெருமாள் கோயில் எனப் பெயர் கூறும் உலக வழக்குண்மை யுணர்க. இப்போது போது போக்குவதற்குச் சுதுாடுவது சிறந்ததன்று ‘பந்தாடுதும்' என்றாள் அத்தெரிவை; சூதாடினாற் பவனிகாண முடியாதென்ற கருத்தினால், சூதாடுவதும் மாதர்க்குரிய விளைாயடல் என்பதை, "பளிக்குநாய் சிவப்பத்தொட்டு, படைநெடுங்கண்ணார் வட்டாட் டாடிடம் பலவுங்கண்டார்" (கம்ப. மிதிலைக். 17) எனக் கூறுவதால் அறியலாம். முலையின் பாரமும் தோளின் பாரமும் இடையின் சிறுமையும் பார்த்தும்அஞ்சாமல் வருக என்று கூறியதை யறிந்து எல்லாரும் கடுகினார் எனக்கூட்டுக. வருக என்று - வருக என்று கூற; என்று என்ற வினையெச்சத்தை எனவெனத் திரித்துக் கொள்க. தம்முடனே கொண்டார், பாங்கியர் தம்முடனே அத் தெரிவையை யழைத்துக் கொண்டார் என்பது. அதுகண்டு அருகில் நின்ற பாணர் கோடியர் கண்டவர் யாவரும் பந்து விளையாட விரைந்து போய்ச் செர்ந்தனர். மண்டி - நெருங்கி. பந்துகளை யெடுத்துப் பலர்க்கும் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் வாங்கியடித்தனர். அடித்து நிறுத்திப் பின் அவளிடமே கொடுத்தனர். அவளே பந்து முழுவதையும் வாங்கியடித்து வெற்றி கொண்டாள் என்பது தோன்ற "ஒருதானே கொண்டாள்" என்றார். பந்தடிப்பதில் வெற்றியாவது முதலிற் பந்தினையெறிந்து நிலத்தில் விழாது மேலும் மேலும் கைகளாற் போக்கு வரவு செய்து எண்ணிக் கணக்கிடுவதும், நிலத்தில் விழுந்தவுடன் அடுத்தவளிடம் கொடுப்பதும், அவளும் அவ்வாறே நிலத்தில் விழுந்தவுடன் கொடுப்பதும் முறையே இவ்வாறே பந்தடிப்பதில் எத்தனை தரம் அவள் அடித்தாள், எத்தனை தரம் இவள் அடித்தாள் என்று கணக்கிட்டு உயர்ந்தவளே வெற்றி பெற்றவளாகக் கொள்வது. பந்தடிக்கும் முறையை,


 

"தானே வாங்கித் தனித்தனி போக்கி
நாற்றிசைப் பழக்கமும் நான்கு கோணமும்
காற்றினுங் கடிதாக் கலந்தன ளாகி
அடித்தகைத் தட்டியும் குதித்துமுன் புரியா
அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும்
தோண்மேற் பாய்ச்சியும் மேன்மேற் சுழன்றும்
கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும்
வாக்குறப் பாடியும் மேற்படக் கிடத்தியும்
நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும்
பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும்
மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
முன்னிய வகையான் முன்னீ ராயிரங்
கைந்நனி யடித்துக் கையவள் விடலும்"

    எனப் பெருங் கதையிற் பந்தடிகண்டது என்ற பகுதியில் (வரி 79 - 92) காண்க. ஆயிரங் கையடித்தது ஈராயிரம். மூவாயிரம் என ஏற்றி எண்ணாயிரங் கைவரை யடித்ததாக வந்துளது ஆதலால் பந்தடிப்பதில் இவள் "ஒரு தானே கொண்டாள்" எனவும், நீங்கள் முன்னடித்த எண்ணிக்கையினும் மூன்றுமடங்கு நான்குமடங்கு இன்னும் அடிக்க வருக வந்தாலும் நானே வெல்லுவேன் என்ற குறிப்புத்தோன்ற" இன்னும் எறிய வருகென்றாள் எனவும் கொள்க.