வரிகள் 614 - 628 : அன்னம் .............மண்டபத்து சொற்பொருள் : அன்னப்பறவையொன்று அவளிரு பாதங்களைத் தாமரையாகவும் இரு கைகளைத் தாமரையாகவும் எண்ணி மேலும் கீழும் அடிக்கடி பறந்து ஏறுவதும் இறங்குவதும்போல அவள் எறியும் அம்மனைகள், பயின்றுவரவும்; கட்டிய பூமாலையிடையே சுழல்வது கூந்தலாகிய பந்துலுக்கிடையிடையே கால் கொடுத்ததுபோலத் தோன்றவும், மேலே சென்று விழும் பொருள் எல்லாம் பூமியைக் கடந்து விழாதவாறு போல மேற்போய் வந்த பந்துகளெல்லாம் அவள் கையைக் கடவா என்று சொல்லவும்; செழித்த தளிர்போன்ற கைகளால் விண்ணுக்கும் அடங்காத பல அம்மனைகளை எம்தாயே நீ விண்ணிலேற்றுகின்றனையே! அவற்றையெல்லாந் தாங்குகின்றனையே! இச் செயல் இங்கு அருமையானதே; எவராலும் புகழ்வதற்கரிய இரு கைகளோ, இரு கால்களோ, இரு கண்களோ விரைந்துசெல்வன எவையென அறிய வியலாதுபோலும். ஐயோ எவரும் வியப்பது பொய்யோ! நீ பொட்டிட்ட நெற்றியுடைய திருமகளேயென்று உலகத்தார் வியப்பாரே என்று பாணர் பொருநர் பாங்கியர் எல்லோரும் புகழும்படி அளவுகடந்த பந்தாட்டமும் அம்மனையாட்டமும், ஆடிப் பருத்த கொங்கையையுடைய மங்கையர் யாவரும் பாராட்ட மீண்டு நீராட்டு மண்டபத்துக்கு வந்து (இருந்தாள்). விளக்கம் : அன்னம் (614) என்பதுமுதல் உலகு வியப்பவென்றோத (626) என்பதுவரை அம்மனை விளையாடல் கூறப்படுகின்றது எனக் கொள்க. அம்மனை யாடல் என்பது மேலே பல அம்மனைக்காய்களையெறிந்து அவற்றில் ஒன்றுங் கீழே விழாதவாறு இரு கைகளாலும் அடித்துக்கொண்டே யிருப்பது பாதம் வரையும் கீழிறங்கிவரினும் நிலத்தின் விழாது குனிந்த கையான் மேலேற்ற வேண்டும். வெள்ளிய அம்மனைகள் மேலிந்த கைக்கு வருவது அன்னப்பறவை கையைத் தாமரையெனக்கருதி வருவது போலத் தோன்றியது; கையைவிட்டுக் கால்வரை யிறங்கி வந்துபின் மேற்செல்வது இருகால்களையும் தாமரைமலரென எண்ணி அன்னம் இறங்குவதுபோலத் தோன்றியது. கூந்தல் ஒரு பந்தர்போலத் தோன்றியது. கூந்தலிற் சூடிய பூமாலை பந்தலிற்கட்டிய தோரணம் போலவும், அம்மனைகள் நாற்புறமும் ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவனவும் இறங்குவனவும் ஆகிய தோற்றம் பந்தற்கால் பரப்பிய காட்சிபோலத் தோன்றியது. அம்மனைகள் எல்லாம் அத் தெரிவையின் இரு கைகளையும் கடந்து கீழ்விழாத இயற்கைக்கு உவமை. "அடையவிழுத்தன பார் கடவா வாறு" என்பது. விழுந்தன அடைய என மாற்றுக. மேலிருந்து கீழ்விழும் பொருள்கள் எல்லாம் பூமியிலேயே விழுவதுபோல அம்மனைகளும் அவள் கைகளிலேயே விழுந்தன என உவமை விளக்கம் கொள்க. கொழுந்தளிர் : அடையடுத்த உவமையாகுபெயர். தளிர்போன்ற கையை யுணர்த்தியது. எம்மனை : விளி. எம் அன்னையே என்பது பொருள். அனை எனக் குறைந்துநின்றது தொகுத்தல். அம்மனை ஏற்றுதி - அம்மனையை ஏற்றுகின்றாய். விண்கொளா அம்மனை என்றது பல அம்மனைகளை யுணர்த்தியது. அம்மனை மேலிருந்து வருவதை முதலிற் கண் நோக்க வேண்டும். அது வருமிடத்திற்குக் கால் விரைந்து செல்லவேண்டும். கை அதனை அடித்து மேற் செலுத்த வேண்டும். பின் அடித்துவரும் அம்மனைகளையும் அவ்வாறே அடித்து அடித்து மேலேற்ற வேண்டும். இவ்வாறு செய்வதற்கு இரு கண், இரு கால், இரு கை இவை விரைவாகச் செல்லவேண்டும், அவ்வாறு செய்வது அரிய செயல் என்பது தோன்ற "கண்ணோ........ஐயோ அறிதலரிது என்ன" பலரும் வியந்தனர் என்றார். மண்ணுலகிற்பிறந்த மங்கையர் இவ்வாறு விளையாடல் அரிது; இவள் திருமகளே வந்து பிறந்தனள் போலும் என்று உலகத்தார் வியக்குமாறு இருந்தது என்று ஆங்குக் கூடியவர் யாவரும் கூறினர் என்க. உலகு - உயர்ந்தோரைக் குறித்துநின்றது. இங்குப் பந்து அம்மனை பயின்று உயர்ந்தோரை யுணர்த்தியதாகக் கொள்க. வியப்ப - வியப்பார்கள். உலகு வியப்ப எனக் கொள்க. ஆட்டும் நீராட்டுமண்டபத்து வந்து எனக் கூட்டுக. "வந்து நீராடியிருந்தாள்; அங்கு நீராடியிருந்தபோது" எனச் சொல் வருவித்துக்கொள்க. |