வரிகள் 628 - 632 : விந்தை .............புகுந்தொழிந்தாள் சொற்பொருள் : வெற்றித்திருவின் தலைவனும் அநபாயனும் ஆகிய குலோத்துங்கன் பவனிவரும் பெரிய மூன்று முரசத்தின் பேரோசை முழக்கங் கேட்டவுடன் அத் தெரிவை பாங்கியர் ஏந்திய ஒரே உடையை உடுத்தினளோ உடுக்க இல்லையோ தெருவிற்குப்போய்ப் புகுந்து செயல் மறந்தாள். விளக்கம் : விந்தை பெருமான் என்றது வெற்றித்திருவுக்குத் தலைவன் என்பது. எனவே அத் துர்க்கையின் பெருமை துலங்குவதற்கு இவனே காரணன் என்பது விளங்கும். அநபாயன் என்பது அவன் பெயர். மூன்று முரசம் ஆவன : படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்பன. இம் மூன்றுள் அரண்மனை வாயிலில் ஒவ்வொன்றும் உரிய காலங்களில் முழங்கும்; இப்போது அரசன் உலாவருதலால் அம் மூன்றும் இங்கு முழங்கின. ஒரு மாதர் - அத் தெரிவைப் பருவத்தாள். முழக்கங் கேட்டவுடனே ஆடையைக் கையில் வாங்கிக்கொண்டு ஓடினாள்; உடுத்தாளோ அல்லது உடுத்திலளோ அத்துணை விரைவிற் சென்றாள் என்பது தோன்ற "உடுத்தாளோ இல்லையோ" என்றார். உடுத்தது மட்டும் அன்றி மற்றையது ஒன்றுஞ் செய்யாது தெருவிற்குச் சென்றாள் என்பது குறிப்பு. ஒழிந்தாள் என்பது தன்னை மறந்தாள் என்ற பொருளைத் தந்தது. ஒழிந்தாள் - நீங்கினாள். பெண்மைக்குரிய பண்புச் செயல் நீங்கினாள் என்பது கருத்து. |