பக்கம் எண் :

பக்கம் எண் :129

குலோத்துங்க சோழனுலா
 


 




635









645









655
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும்
தாதுந் தமனிய மாலையுந் தண்கழுநீர்ப்
போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச்
சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்
பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர்
ஒழுங்காய சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத்

தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும்
உச்சக் கலனணியாத் தோளிணைக் கோரிரண்டு
பச்சைக் பசுங்காம்பு பாடழிய - நிச்சம்
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க்
கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி
ஆலின் வளர்தளிரி னைதாகி - மேலோர்
இழியு மொருசாம ரேகையு முந்திச்
சுழியும் வெளிவந்து தோன்றக் - கெழிய
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
திசையின் புடையடையச் செல்ல - மிசையே
பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ
சுறையின் மரகத மொப்ப - அறையும்
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல
தாங்கி யுலகத் தரிப்பத் தரியென்று
பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கேழ்
உருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்
தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும்


 

வரிகள் 632 - 658 : மாந்தளிரும் .............எதிர்கொண்டுசென்றாள்

சொற்பொருள் : மாந்தளிரும் பல பூந்தாதும் பொன்மாலையும் குளிர்ந்த செங்கழுநீர்ப் பூவும் வேறு அணிகளும் மேன்மறையாத கூந்தலுக்குச் சோழன் விரும்பும் யமுனையாற்றின் அலையும் காவிரியாற்றின் கருமணலும் தோற்றுப் புறங்கொடுப்பவும் பின்பு, ஒழுங்கான செவ்வரி பரந்த விழிகளினூடு மையொட்டாதால் அவ் விழிகள் அழகு கெடாமல் செருக்குற்று நிற்கவும், மணிகளையும் பயந்திருந்த சங்கானது இன்று ஒரு மணியையும் ஈன்றிலது என்று கூறும்படி செழித்த கழுத்து விளங்கவும், நின்று ஒளிவீசும் உயர்ந்த அணிகலன் புனையாத இரு தோளுக்கும் இரு பச்சை மூங்கில் பெருமையழிந்து தோன்றவும், பொன்னொளிபரவும் கச்சுப் புனையாததால் இடையொடியும்படி கொங்கை பருத்துத்தோன்றவும், பச்சையொளிவிடும் அழகிய வயிறு அவ் வயிற்றினைக்கட்டும் (உதரபந்தனம்) அணியைக் கொள்ளாமல் நீங்கி வளர்ந்து ஆலிலைத்தளிரினும் மெல்லிதாகித் தோன்றவும், ஒன்றாக மேல் இருந்து இறங்கிய ஒப்பற்ற சாமரேகையும் உந்திச்சுழியும் வெளியே வந்து தெரியவும், பொருந்திய ஒலியொடு கூடிய மேகலையாற் கட்டப்படாத அல்குல் திசையின் பக்கமெல்லாம் பரந்து செல்லவும், மேலே பாரம் பொருந்திய கிம்புரியாற் பூட்டப்படாத துடை வெள்ளிய ஆடையுறையில்லாத மரகதம்போலத் தோன்றவும், ஒலிக்கின்ற சிலம்பு புனையாத அடியாகிய செந்தாமரைமலர் ஒலிக்குங்குரல் இல்லாமையால் அஞ்சாமல் ஓடவும், பாங்கியர் "எம் தலைவியே நீ பல அணிகலன்களையும் உலகம் நிலைபெற்றிருப்பதற்காகத் தரித்துக்கொள்" என்று எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து நின்று பாராட்டவும், அழகிய அவள் உருவத்தின் நிறவொளியானது பரவிச்சென்று உலக முழுவதிலும் செல்லவும் தெருவில் சோழனையெதிர்கொள்ளச் சென்றாள்.


 

விளக்கம் : கூந்தலில் மாந்தளிரும் பூந்தாதும் பொன்மாலையும் கழுநீர்ப்பூவும் புனைவது இயற்கை. அவர்கள் கருங்கூந்தலின் நிறத்தை மறைத்துப் பல்வேறு நிறங்களைத் தோற்றுவிக்கும். கருமைநிறமட்டும் தோன்றாது. இவள் உடுத்த துகிலோடே வந்தனளாதலின் ஒன்றுங் கூந்தலில் இல்லை. அன்றியும் நீராட்டியவுடன் புறப்பட்டதாலும் கூந்தல் தன்னியற்கை யாகிய கருமைநிறத்தைக் காட்டியது; அதுகண்டு யமுனையாற்றலையும், காவிரிக்கருமணலும் தோற்றன. யமுனைநீர் நீலநிறம் வாய்ந்தது. அதனால் அவ்வாற்றலையைக் கூந்தலுக்குத் தோற்றதாகக் கூறினர். புறம்புதையா ஓதி என்றது, மாந்தளிர் முதலியவற்றால் புதைக்கப்படாத கூந்தல். புதைத்தல் - மறைத்தல்.புறங்கொடுப்ப எனவே புறங்கொடுத்தோடுமாறு கூந்தல் தோன்றவும் எனக் குறிப்புக்கொள்க. விழிகளிற் கரிய மையெழுதின் அம் மை இமைகளில் ஒட்டிப் பார்வையை மங்குவிக்கும், மையணியாது இவள் வந்தமையால் விழிகள் மழுங்காமல் மதர்த்து நின்றன என்பது கருத்து. "கைபோய் மதர்ப்ப" என்பது ஒழுங்காகச்சென்று மதர்த்துநிற்க என்ற பொருளைத் தந்தது. கை - ஒழுங்கு, மாணிக்கம் புனைந்ததொரு சங்கம் பயந்தது இன்று எனச் செழுங்கழுத்து விளங்க எனக் கூட்டுக. முன்பு மாணிக்கமாலை புனைந்திருந்த சங்கமானது ஒன்றையும் பயந்ததில்லை என்று பிறர் சொல்லும்படி செழித்த கழுத்து விளங்கமுன் என்பதும் என்று என்பதும் வருவித்துக்கொள்க. மாணிக்கம் மணிகளிற் சிறப்புடையதாதலால் மாணிக்கத்தை மட்டும் கூறினர். கூறினும் மாணிக்கமாலை முதலிய மணிமாலைகளைப் புனைந்த ஒரு சங்கம் எனக்கொள்க. பயந்தது இன்று - பெற்றதில்லை. சங்கம் முத்தினையாவது ஈனும்; அதனையும் ஈன்றிலது வறிதே யிருந்தது என்ற குறிப்புத் தோன்ற இன்று பயந்தது என விளங்க என்றார். செழுங்கழுத்து ஒரு சங்கம் என விளங்கியதேயன்றி அச்சங்கம் முத்து மாணிக்கம் முதலியவற்றையீன்றதுபோல விளங்கவில்லை என்பது கருத்து. உச்சக்கலன் - உயர்ந்த அணிகலன். அணிகலம் புனையாத தோளினைகள் தம் இயற்கையழகைக் காட்டின; அவ்வழகு கண்டு காம்பு பாடழிந்தன. பச்சைக் பசுங்காம்பு - மிகவும் இளமையான பசிய மூங்கில். பச்சைக்குழந்தை என்பது போன்றது. பாடழிய எனக் கூறினும் பாடழியும்படி தோளிணைகள் விளங்க எனக் கொள்க. நிச்சம் - நிச்சயம் என்பது குறைந்து நின்றது. உறுதி என்பது பொருள். பொலன் அசும்புகச்சு - எனக் கொள்க. பொன்னொளி விளங்கும் கச்சு. அசும்புதல் - ஒழுகுதல். அற்றத்தோ, மறைந்தபோதே; கச்சு மறைந்தபோதே கச்சுக் கட்டாதபோதே கச்சு இல்லாதபோதே என்பது பொருள். விசும்பு-வானம். இஃது இடைக்கு உவமை. விசும்பு உவமையாகு பெயராய் இடையை யுணர்த்தியது. குடிவாங்க - அவ்விடத்தினின்றும் போக. இடையற்றுப் போம்படி கொங்கை பருத்துத் தோன்ற என்க. உதரபந்தனம் - இடையிற் கட்டுவதாகிய ஓர் அணி, கோள் - கொள்வது. அவ்வணியைக் கொள்ளாததால் வயிறு ஆலந்தளிரினும் மெல்லியதாகத் தோன்றியது. ஐது ஆகி - மெல்லிதாகி. ஓர் மேல் இழியும் என மாற்றுக. ஒன்றாக மேலிருந்து இறங்கிய சாமரேகை என்க. சாமம் - பச்சை. ரேகை - வரி. இது மயிரொழுங்கினையுணர்த்தும். உந்திச்சுழி : உருவகம். நீர்ச்சுழி போன்றது அது. இடையில் உடைநில்லாது சரிந்ததால் கொப்பூழும் அதற்கு மேலுள்ள மயிரொழுங்கும் வெளிவந்து தோன்றியதென்க.
கெழிய - பொருந்திய. இசையின் கலாபாரம் என்பது ஒலியுடைய மேகலையைக் குறித்து. இசை - ஒலி; இயைந்த என்றும் பொருள் கொள்ளலாம். கலா + பாரம் - கலையாகிய கனமான பொருள். இது வடமொழித்தொடர். யாப்புறா - கட்டப்படாத. மேகலை புனையாத வல்குல் அல்குல் திசையின் புடையடையச் செல்வதுபோலப் பரந்துதோன்ற என்க. கிம்புரி - பூண். இரு துடைகளிலும் அணியும் அணியின் பெயர் கிம்புரி. கிம்புரி பூட்டப்படாத துடையானது தூசுறையில் மரகதம் ஒப்பத் தோன்றியது. தூசுஉறை - உடையாகிய உறை. உறையின் மரகதம் - உறையினுள்ளிருக்கும் மரகதம், இல் : ஏழனுருபு. துடை மரகதமாகவும் உடை உடுத்திருப்பது அதற்கு உறையாகவும் தோன்றியது. மரகதமாகத் தோன்றியதற்குக் காரணம் மயிரொழுங்குபோலும். அறையும் - ஒலிக்கின்ற. செந்தாமரை என்றது இருபாதங்களையும், பாதங்களில் சிலம்பு முதலிய அணிகள் இல்லாததால் நடக்கும்போது ஒலி தோன்றவில்லை. ஒலி தோன்றாமையாற் பாதங்கள் விரைவாகச் சென்றன என்பது; சிலம்பொலி கேட்பின் கால்கள் விரைந்து செல்கிறோம் இடையொடிந்துவிடுமோ என்று அஞ்சும். ஒலி கேளாமையால் விரைவா மெதுவா என்பதைக் கால்கள் தாம் அறிந்து கொள்வதற்கு வழியில்லை என்ற கருத்துத்தோன்ற "சிலம்பு குரலஞ்சாதோட" என்றார். கால்கள் ஓடின என்க. அணிகலன்களால் உன் உருவை மறைத்துச் செல்லின் உலகம் நிலைநிற்கும். நீ இவ்வாறு இயற்கையெழில் தோன்ற வெளிச் சென்றால் உன் வடிவுகண்டு மயங்கி ஆடவர் பலர் உயிரிழந்து விடுவார். உலகம் அழிந்துவிடும் என்பதை நீயறியாது செல்வது நன்றன்று, உலகம் நிலைபெறுவதற்காகவாவது அணிகலன் தரித்துச்செல்; செல்லாதே இவ்வுருவுடன், என்றென்று பாங்கியர் கூறித் தடுக்கவும் அதனையும் செவியேற்காமல் வந்தனள் என்பார், "உலகநதரிப்பத்தரியென்று............பாராட்ட" என்றார். அத் தெரிவையின் உருவத்தின் ஒளி யெங்கும் பரந்துசென்றது அத்துணைச் சிறந்த வனப்புடையாள் என்பது தோன்ற "உருவிலொளியே யுலகடையக் கோப்ப" என்றார். புறங்கொடுப்ப, மதர்ப்ப, விளங்க என்பனபோல வரும் செயவென் வாய்பாட்டு வினையெச்சங்களையெல்லாம் உம்மை கொடுத்து நிறுத்தி சென்றாள் என்ற வினைமுற்றுடன் கூட்டி முடிக்க. உடுத்த உடையுடன் பாங்கியர் தடுத்துப் பாராட்டவும் நில்லாது பவனியைக் காணப்பரிவுடன் வந்து தெருவில் நின்றாள் அத் தெரிவை என்பது.